Home / சினிமா / திரைவிமர்சனம் /

இவன் தந்திரன் – விமர்சனம்

Posted On : July 2, 2017

“தெருவுக்கு நாலு சிவில் இஞ்சினீயர் இருக்கிறான். ஆனால், அவசரத்துக்கு ஒரு கொத்தனார் கிடைக்க மாட்டான்..!” என்று இஞ்சினீயரிங் முடித்துவிட்டு சும்மா இருப்பவர்களைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வார்கள். ஆனால் இந்தப் பிரச்சினை வேடிக்கையானதல்ல. இஞ்சினீயரிங் முடித்துவிட்டு வேலையில்லாமல் அல்லது பொருந்தாத வேலையில் இருப்பவர்கள்தான் இன்று நாடு முழுதும் பரவிக் கிடக்கிறார்கள்.

இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அவலம்தான் இன்றைய மாணவர்களின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை இஞ்சினீயரிங் படித்த மாணவர்களுக்காக அர்ப்பணித்திருக்கும் இயக்குநர் கண்ணனை இந்த விஷயத்துக்காகவே முதலில் பாராட்டியாக வேண்டும்.

அப்படி தங்கள் பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டுவிட்டு ரிச்சி தெருவில் கடை போட்டு வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நாயகன் கௌதம் கார்த்திக்கும், ஆர்ஜே பாலாஜியும். அசெம்பிள்ட் செல்போன், லேப்டாப், சிசிடிவி கேமரா பொருத்துவது என்று வாழ்க்கையை ‘இஞ்சினீயரிங் கியரி’லேயே ஓட்டிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மந்திரியாக வரும் சூப்பர் சுப்பராயனுடன் சிசிடிவி கேமரா அமைத்துக் கொடுத்ததற்கான பணம் பெறுவது தொடர்பாக சின்ன பிரச்சினை எழுகிறது.

சூப்பர் சுப்பராயனின் மைத்துனராகவும், அவரது வலதுகரமாகவும் இருக்கும் ஸ்டன்ட் சில்வா ஒரு கட்டத்தில் இவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தை ஏமாற்றுவதுடன், அவமானப்படுத்தியும் அனுப்ப, அவர்களிடமிருந்து எப்படியாவது பணத்தைக் கறக்க வேண்டும் என்று உறுதி எடுக்கிறார் கௌதம் கார்த்திக். தனக்கு சேர வேண்டிய பணத்துக்காக எந்த எல்லைக்கும் போக நினைக்கும் அவரது உறுதியும், கேரக்டரைசேஷனும்தான் படமே…

இந்த வேளையில் சூப்பர் சுப்பராயன் நடத்தும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கலிடம் முறைகேடாக பணம் பெறுவதும், அதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் வாடிக்கையாகப் போக, அந்தக் கோபமும் சேர்ந்துகொள்கிறது கௌதமுக்கு. அதனால், தன் இஞ்சினீயரிங் மூளையையுக் கொண்டு அவரை எப்படித் தந்திரமாகப் பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.

படத்தின் கதை கமர்ஷியல் அம்சங்களுடன் நகர்ந்தாலும், எடுத்துக் கொண்ட பாதையில் இருந்து எள்ளளவும் விலகிச் செல்லாமல் எந்த வித லாஜிக் மீறலும் இல்லாமல் செல்வது படத்தின் சிறப்பு.

அத்துடன் கதைக்கான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதில் இயக்குநர் கண்ணனை இன்னொரு முறை பாராட்டியே ஆக வேண்டும். கௌதம் கார்த்திக்கும், ஆர்ஜே பாலாஜியும் அப்படியே இஞ்சினீயரிங் படித்த மாணவர்களாகப் பொருந்திப் போகிறார்கள். அதேபோல் நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் கொஞ்சம் கூட நடிகைக்கான அனாவசிய மினுமினுப்பு இல்லாமல் இயல்பான மாணவி எப்படி இருப்பாரோ அந்தத் தோற்றமும், நடவடிக்கைகளுமாக ‘நச்’.

கொள்கையில் பிடிவாதமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு ‘அக்கினிக் குஞ்சை’ கௌதம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் உச்சரிப்பு, குரல்வளம் இவற்றிலெல்லாம் அவர் காட்டும் அக்கறை அவரை இன்னும் உயரத்துக்குக் கொண்டு செல்லும். அவரது கேரியரில் இந்தப் படம் ஒரு திருப்புமுனையைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

சமகால அரசியல், சமூக நிகழ்வுகளைக் கொண்ட நகைச்சுவையாலேயே உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார் ஆர்ஜே பாலாஜி. இவர் வாயைத் திறந்தாலே அரங்கம் அதிர்வது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல, சமகால சமூக விமர்சனங்களுக்காகவும்தான்.

சினிமா கிளாமர் தொடாத ஸ்ரத்தா ஸ்ரீநாத், இனி ஆரோக்கியமான கமர்ஷியல் படங்களில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருவார். வெளியூர் வேலைக்குச் செல்கிறேன் என்று கௌதமின் காதலைத் தள்ளிவைத்துவிட்டு சென்றாலும், அந்தக் காதல் உறைத்து இன்டர்வியூ கேள்விகளுக்கு கௌதமின் காதல் மொழிகளைப் பதிலாகச் சொல்லிவிட்டு கௌதமிடம் வந்து சேர்வது ‘ஹைகூ’ அழகு.

படிப்பறிவில்லாத நிலையிலும் சமுதாயத்தை ஆட்டிப்படைத்து பணமுதலையாக மாறி நிற்கும் சூப்பர் சுப்பராயனின் மாடுலேஷனும், நடிப்பும் அவரை சமகால அரசியல்வாத்ஜியாகவே உணர வைக்கின்றன.

அவரது வலதுகரமாக வரும் சில்வாவும் நல்ல தேர்வு. இடைவேளையிலேயே தங்கள் எதிரி கௌதம்தான் என்று சில்வா கண்டுபிடித்துவிட, அதைத் தொடர்ந்து நேரும் சம்பவங்கள் அற்புதமான திரைக்கதைக்குச் சான்று.

அதேபோல் ஒவ்வொரு காட்சியும் அடுத்த நகர்வை ஊகிக்க முடியாமல் விறுவிறுப்பைக் கூட்டியிருப்பதால் படம் ஆரம்பித்த இடத்திலிருந்து தொய்வே ஏற்படவில்லை. வெகுகாலத்துக்குப் பிறகு பொருள் பொதிந்த நல்ல வசனங்களைத் தந்ததற்கும் இன்னொரு முறை இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு. எஸ்.தமனின் இனிய பாடல்களுக்கான இசையும், அதை மிஞ்சும் பின்னணி இசையும் அழகு.

சமீப காலத்தில் இப்படி ஒரு சமூக சிந்தனை கூடிய ரசனை மிக்க படம் பார்த்ததாக நினைவில்லை. அதனை படித்தவர்களிலிருந்து பாமரர்கள் வரை ரசிக்கவைத்த இயக்குநர் கண்ணனின் படங்களில் இனி முதல்நிலை ஹீரோக்களைக் காணும் நிலை விரைவிலேயே வரும்.

இவன் தந்திரன் – வெற்றிக் கொடி கட்டும் இஞ்சினீயரிங் எந்திரன்..!

Comments

தொடர்புடைய செய்திகள்