Home / உலகம் / பிரான்ஸ் /

காதலியை சந்திக்க சென்ற 93 வயது முதியவர்

Posted On : August 14, 2017

பிரான்சில் முதியோர் இல்லத்தில் இருந்து மாயமான 93 வயதான முதியவர் தமது காதலியை சந்திக்க சென்றுள்ளது அவரை தேடிய உறவினர்களை நெகிழ வைத்துள்ளது.

பிரான்சில் உள்ள கடற்கரை கிராமமான Pléneuf-Val-André பகுதியிலேயே குறித்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள பிரிட்டானி என்ற முதியோர் இல்லத்தில் 93 வயது முதியவர் ஒருவர் தங்கி வந்துள்ளார். ஒவ்வொரு கிழமையும் இவரை சந்திக்க இவரது பேத்தி ஒருவர் வந்து செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று வழக்கம் போல முதியவரை சந்திக்கும் பொருட்டு கடந்த சனிக்கிழமை மதியம் அந்த பேத்தி வந்துள்ளார்.

ஆனால் அந்த முதியவரின் அறையில் அவர் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். குறித்த இல்லத்தில் அனைத்து பகுதிகளிலும் முதியவரின் பேத்தியுடன் இணைந்து அந்த இல்லத்தின் ஊழியர்கள் அனைவரும் தேடியுள்ளனர், இருப்பினும் எந்த பயனும் இல்லை.

இதனையடுத்து குறித்த முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் முதியோர் இல்லத்தின் அருகாமையில் உள்ள பூங்கா ஒன்றில் முதியவரை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பூங்காவில் அந்த முதியவர் பெண்மணி ஒருவருடன் மிகவும் உற்சாகமுடம் பேசிக் கொண்டிருப்பதை பொலிசார் கண்டறிந்தனர்.

மட்டுமின்றி இருவரும் கைகள் கோர்த்தபடி மெதுவாக அந்த பூங்காவில் நடைபோட்டபடியே மகிழ்ச்சியுடன் தங்கள் கதைகளை பங்கு வைத்ததாக உள்ளூர் நாளேடு ஒன்று உறுதி செய்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்