குழந்தை புகை பிடிப்பதாய் வெளியான புகைப்படம்: விசாரணையை துரிதப்படுத்திய பொலிஸ்
பச்சிளம் குழந்தையை புகை பிடிக்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக கூறி ஜேர்மனியில் உள்ள Kassel பொலிசார் தாமாகவே முன்வந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
சமீபத்தில் ஜேர்மனியின் உள்ளூர் நாளேடு ஒன்று பச்சிளம் குழந்தை புகைப்பிடிப்பது போன்ற பேஸ்புக் பதிவு ஒன்றை செய்தியாக வெளியிட்டது.
அந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இதனையடுத்து அந்த பேஸ்புக் பதிவு தொடர்பாக ஜேர்மனியின் Kassel பகுதி பொலிசார் தாமாகவே முன்வந்து விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
பச்சிளம் குழந்தையை துஷ்பிரயோகம் செய்வதாக கருதி இந்த வழக்கை விசாரணை செய்ய இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த புகைப்படத்தில் பச்சிளம் குழந்தை ஒன்றின் வாயில் பற்ற வைத்த சிகரெட் ஒன்றை நபர் ஒருவர் திணித்து புகைக்க வைக்கிறார். ஆனால் விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கை கவனமுடன் கையாள வேண்டும் என கருதுகின்றனர்.
காரணம் குறித்த புகைப்படத்தை தொடர்புடைய நபரே பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளாரா? அவரது உண்மையான பெயரில் தான் குறித்த புகைப்படம் பதிவாகியுள்ளதா?
மட்டுமின்றி குறித்த நபர் உண்மையில் Kassel பகுதியில் தான் குடியிருக்கிறாரா உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளதால் விசாரணை முன்னெடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆனால் உள்ளூர் நாளேடு ஒன்று மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் அந்த குழந்தையின் தந்தை எனவும் Kassel பகுதியிலேயே அவர் குடியிருந்து வருவதாகவும், ஆனால் அவர் பல்கேரியா நாட்டவர் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளதால் அந்த நபர் குறித்த புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது இப்படியிருக்க, சில நாடுகளில் சிறுவர்கள் புகைப்பது கலாசாரமாக பார்க்கப்படுகிறது என ஜேர்மனியின் உள்ளூர் நாளேடு ஒன்று இந்த விவகாரம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மணியின் அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருவதாகவும் அந்த நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.