Home / சினிமா / திரைவிமர்சனம் /

புரியாத புதிர் – விமர்சனம்

Posted On : September 6, 2017

இசையமைப்பாளராக முயற்சிக்கும் விஜய் சேதுபதி, தன் நண்பனுடைய இசைக்கருவிகள் விற்கும் கடையை மேற்பார்வை செய்கிறார். அங்கு வயலின் வாங்க வந்த காயத்ரியுடன் அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்கிறது. தோழியுடன் அபார்ட்மென்ட்டில் தங்கியிருக்கும் காயத்ரி, தன்னை யாரோ பின்தொடர்வதாக உணர்கிறார். அப்போது அவரது ஆபாச போட்டோ, விஜய் சேதுபதியின் செல்போனுக்கு வருகிறது. இதையடுத்து, ஜவுளிக்கடையில் காயத்ரி டிரெஸ் மாற்றும் வீடியோ, வீட்டு பாத்ரூமில் குளிக்கும் வீடியோ வருகிறது. அதை அனுப்பியவரின் செல்போன் நம்பரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஜய் சேதுபதி ஈடுபடுகிறார்.அப்போது வரும் மர்ம போன் காலில், இனிமேல் இதுபோன்ற ஆபாச படமும், வீடியோக்களும் வராமல் இருக்க வேண்டும் என்றால், பொது இடத்தில் அரை நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று விஜய் சேதுபதிக்கு சொல்லப்படுகிறது. அதன்படி அவர் நிற்கிறார். இதற்கிடையே காயத்ரியின் தோழி மகிமா நம்பியாரின் வீடியோ வெளியாகிறது. அவமானத்தால், மாடியிலிருந்து கீழே குதித்து மகிமா தற்கொலை செய்துகொள்கிறார். அவர் இப்படி செய்ததற்கு தானும், விஜய் சேதுபதியும் கூட காரணம் என்று சொல்லும் காயத்ரி, கிளைமாக்சில் என்ன முடிவு எடுக்கிறார் என்பது, எதிர்பாராத ட்விஸ்ட். இசையமைப்பாளராகத் துடிக்கும் வேடத்தில், இயல்பாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

காயத்ரியை முத்தமிடும் காட்சி மற்றும் காதல் காட்சிகளில் அவரது வித்தியாசமான மேனரிசங்கள் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்சில் காயத்ரியின் காலடியில் விழுந்து கதறுவது, நெகிழச் செய்கிறது. காயத்ரியைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. குருவி தலையில் பனங்காய் மாதிரி, கனமான கேரக்டரில் வருகிறார். மகிமா அழகாக இருக்கிறார். அப்பாவின் சுடுசொல்லையும், சக மாணவர்களின் ஏளனப் பார்வையையும் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வது, அதிர வைக்கிறது. அர்ஜுனன், ரமேஷ் திலக், ஆனந்த் வர்மா போன்றோரும் நடித்திருக்கின்றனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்கு தேவையான ‘டோன்’ கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். பாடல்களிலும், பின்னணி இசையிலும் அழுத்தம் கொடுத்து, கவனம் ஈர்த்திருக்கிறார் சாம். விளையாட்டுக்காக செல்போனில் எடுத்த வீடியோவும், போட்டோக்களும், கவனச்சிதறலால் எவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிகிறது என்பதை அழுத்தமாகச் சொல்ல முயல்கிறார் இயக்குனர். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை செல்போனில் பகிர்ந்து இன்பம் காணும் காமுகர்களுக்கு எச்சரிக்கை மணியும் அடித்திருக்கிறார். என்றாலும், தற்கொலையை நியாயப்படுத்துவது போல் காட்சிகள் அமைத்திருப்பது நெருடல். மகளுக்கு ஏற்பட்ட பிரச்னையை சட்டப்பூர்வமாக அணுகாமல், உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவு எடுக்கும் அப்பா கேரக்டரை ஏற்க முடியவில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்