Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் ஆண்களுக்கு பெண்களை விட உயர் ரத்த அழுத்தம் அதிகம்: ஆய்வு அறிக்கை

Posted On : September 27, 2017
இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் உள்ளது என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய ஊட்டச்சத்து அமைப்பு ஒன்று இந்திய நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் ஹைப்பர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் பற்றி ஆய்வு ஒன்று மேற்கொண்டது.

இந்த ஆய்வு முடிவில் ஆண்களுக்கு பெண்களை விட அதிக அளவில் உயர் ரத்த அழுத்தம் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் பெண்களுக்கு 26 சதவீதமும், அதேவேளையில் ஆண்களுக்கு 31 சதவீதமும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளையில் இந்த உயர் ரத்த அழுத்தம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கேரளாவில் (31 முதல் 39 சதவீதம்) அதிக அளவிலும், பீகாரில் (16 முதல் 22 சதவீதம்) குறைந்த அளவிலும் உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

தொடர்ச்சியாக ஒரு மனிதனின் தமனிகளில் ரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில் இருப்பது மருத்துவ முறைப்படி உயர் ரத்த அழுத்தம் என அழைக்கப்படுகிறது.

இதேபோன்று ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நீரிழிவு நோயானது முறையே 22 சதவீதம் மற்றும் 19 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது அதிக எடை மற்றும் உடல் பருமன், உடலியல் செயல் இல்லாமை, ஹைப்பர்லிப்பிடீமியா (கொலஸ்டிரால் உள்பட ரத்தத்தில் கொழுப்புகளின் அளவுகள் அதிகரித்து காணப்படுவது) ஆகியவற்றுடன் தொடர்புடையது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்களில் புகை பிடித்தல் 16 சதவீதமும், மதுபானம் குடித்தல் 30 சதவீதமும் உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

நாட்டில் உள்ள 16 மாநிலங்களில் உள்ள மொத்தம் 1.72 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்