Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

காஷ்மீரில் வீடு புகுந்து பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் வெறிச்செயல்

Posted On : September 28, 2017
காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் வீடு புகுந்து பாதுகாப்பு படை வீரரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹாஜன் பகுதியை சேர்ந்தவர் ரமீஸ் பாரே (வயது 30). ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தார். அவர் விடுமுறையில் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.
இந்நிலையில் ரமீஸ் வீட்டில் பயங்கரவாதிகள் சிலர் நேற்று இரவு திடீரென புகுந்தனர். அவர்கள் சரமாரியாக ரமீஸ் மீதும், வீட்டில் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரமீஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய தந்தை, 2 சகோதரர்கள், அத்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர். பயங்கரவாதிகளின் இந்த வெறிச்செயல் கோழைத்தனமானது என்று காஷ்மீர் மாநில டி.ஜி.பி. எஸ்.பி.வெய்டு கண்டனம் தெரிவித்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்