Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

காஷ்மீரில் ராணுவ முகாமில் தாக்குதல் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை படை வீரர் ஒருவர் பலி

Posted On : October 4, 2017
காஷ்மீரில் ராணுவ முகாமில் புகுந்து தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச விமான நிலையம் அருகே ஹூம்கமா என்னும் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையின் முகாம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் ஏராளமான ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் வந்தனர். அவர்கள் பிரதான நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறே முகாமிற்குள் நுழைய முயன்றனர். அவர்களில் ஒருவரை ராணுவ வீரர்கள் அதிரடியாக சுட்டுக் கொன்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மற்ற 2 பயங்கரவாதிகளும் மின்னல் வேகத்தில் ஓடி ராணுவ முகாமுக்குள் புகுந்துவிட்டனர். அங்கு ஒரு கட்டிடத்துக்குள் பதுங்கிக் கொண்டு சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

அப்போது காவல் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. இந்த மோதலில் படை வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மூவரையும் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

இதற்கிடையே மோதல் நடந்த கட்டிடப்பகுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ராணுவ முகாமிற்குள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளையும் சுற்றி வளைத்து தாக்கினர்.

காலை 9.45 மணி அளவில் தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே 6 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது.

3 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் வேறு யாரும் பதுங்கி இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்யவும், வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறியவும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தபோது, ஒரு தோட்டா அப்பகுதியில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரியின் வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் மீது பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பயங்கரவாதிகள், ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் விமான போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நிலைமை சீரடைந்த பின்னர் விமான சேவை காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ–முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர்.

இதற்கிடையே அனந்த் நாக் மாவட்டத்தின் அர்வானி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொதுமக்களில் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்று உடலை குவாசிகுந்த் என்னும் இடத்தில் வீசி சென்றனர்.

இந்த சம்பவத்தில் லஷ்கர் இ–தொய்பா இயக்கத்தின் சகோர் மற்றும் ஆசாத் டாடா என்ற 2 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புல்வாமா மாவட்டத்தில் பத்காம்போரா என்னும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு உறவினர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற ஆசிக் ஹூசைன் என்ற போலீஸ்காரரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

Comments

தொடர்புடைய செய்திகள்