Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

500 வீரர்கள் பாதுகாப்புடன் மீண்டும் டோக்லாமில் சாலையை விரிவுபடுத்தும் சீனா

Posted On : October 6, 2017
500 வீரர்கள் பாதுகாப்புடன் டோக்லாம் பகுதியில் சாலையை விரிவுபடுத்தும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சீனா சாலை அமைக்க கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி முயன்றது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.
டோக்லாம் பகுதியில் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியாவை சீன ஊடகங்கள் மிரட்டின. ஆனால், சீனாவும் வாபஸ் பெற்றால்தான் படைகளை வாபஸ் பெறுவோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாகக் கூறினார். இதற்கிடையில் இருநாட்டு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை எல்லையில் 3 முறை நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
ஏறக்குறைய 70 நாட்கள் நீடித்த இந்த பிரச்சினை  இந்தியா – சீனா இடையே தூதரக அளவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது. இருநாடுகளின் ராணுவம் பரஸ்பரம் பின்வாங்க சம்மதம் தெரிவித்தன. ஆனால், இதற்கு எந்த விளக்கமும் முழுமையாக இரு தரப்பிலும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்ட டோக்லாம் என்ற இடத்தில் இருந்து சரியாக 10 கி.மீட்டர் தொலைவில் சீனா சாலையை விரிபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் 500 வீரர்கள் பாதுகாப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டோக்லாம் பீடபூமியில் இந்த பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. இதனால், சீனா மேற்கொள்ளும் பணிகளால் மீண்டும் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்