Home / விளையாட்டு /

தென்ஆப்பிரிக்காவுக்கு தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ கிடைக்க வாய்ப்பு

Posted On : October 13, 2017
 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா (120 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (119 புள்ளி), ஆஸ்திரேலியா (114 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன.

சமீபத்தில் இழந்த ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிப்பதற்கு தென்ஆப்பிரிக்காவுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது. தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள வங்காளதேசத்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி நாளை மறுதினம் முதல், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சொந்த ஊரில் மோத இருக்கிறது.

இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் தரவரிசையில் 121 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறலாம். 2-0 என்ற கணக்கில் வென்றாலும் மயிரிழையில் இந்தியாவை முந்தும். அதே சமயம் 2-1 என்ற கணக்கில் தொடரை வசப்படுத்தினால் 2-வது இடத்திலேயே நீடிக்கும்.

ஒரு வேளை தென்ஆப்பிரிக்கா முதலிடத்தை தட்டிப்பறிக்க நேர்ந்தாலும், அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் மறுபடியும் நமது அணி அரியணையில் ஏறி விடும்.

Comments

தொடர்புடைய செய்திகள்