Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சேர்ப்பு: ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

Posted On : October 13, 2017
 தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த நோயை, முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பது இல்லை. எனவே, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு நோய் ஏன் சேர்க்கப்படவில்லை? என்று கேள்வி நீதிபதிகள் எழுப்பினர்.

அதன்பின்னர், காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சேர்க்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இந்நிலையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாலும் காப்பீடு உண்டு. நோயாளிகளை சேர்க்க இடம் இல்லாமல் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக கூறுவது தவறான தகவல் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்
பிரதான செய்திகள்