Home / உலகம் /

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்

Posted On : October 24, 2017
ஜப்பான் பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்ட திடீர் தேர்தலில் ஷின்ஜோ அபே கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஷின்ஜோ அபே மீண்டும் பிரதமர் ஆகிறார்.

ஜப்பான் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு திடீர் தேர்தலை சந்திக்க தயார் என்று பிரதமர் ஷின்ஜோ கடந்த மாதம் அறிவித்தார். அவருடைய ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் ஓராண்டு இருந்த நிலையில் அவருடைய இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, வடகொரியாவின் அச்சுறுத்தல், தென் சீனக்கடல் பிரச்சினை ஆகியவற்றுக்கு இடையே பாராளுமன்றத்துக்கு திடீரென தேர்தலை நடத்தினால் தம்மால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று ஷின்ஜோ அபே உறுதியாக நம்பினார்.

இந்த நிலையில், 465 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான் பாராளுமன்றத்துக்கு, அக்டோபர் 22–ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஜப்பானில் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் ஷின்ஜோ அபே தலைமையில் எல்.டி.எப். என்னும் தாராளவாத ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து ஒரு அணியாக போட்டியிட்டது. டோக்கியோ நகரின் முதல் பெண் கவர்னரான யூரிகோ கொய்கேவின் நம்பிக்கை கட்சி இன்னொரு அணியாகவும், கம்யூனிஸ்டு கட்சிகள் பசிபிஸ்ட் என்ற கூட்டணியையும் அமைத்து போட்டியிட்டன.

நேற்று முன்தினம் மாலை ஓட்டுப்பதிவு முடிந்த உடன் அனைத்து தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஷின்ஜோ அபேயின் தாராளவாத ஜனநாயக கட்சி அபார வெற்றி கண்டது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 233 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த கட்சி 284 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. ஷின்ஜோ அபே மீண்டும் பிரதமர் ஆகிறார்.கடந்த தேர்தலில் தாராளவாத ஜனநாயக கட்சி பெற்ற வெற்றியை விட தற்போது 6 இடங்கள் குறைவு என்றாலும், அடுத்த ஆண்டு தேர்தல் நடந்தால் இப்போது கிடைத்துள்ள வெற்றி ஷின்ஜோ அபேவுக்கு கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே என்று ஜப்பான் நாட்டின் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நம்பிக்கை கட்சியை தொடங்கிய டோக்கியோ நகரின் பெண் கவர்னர் யூரிகோ கொய்கேவின் கூட்டணிக்கு 50 இடங்கள் கிடைத்தன. கொய்கே இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் அவருடைய கட்சி ஷின்ஜோ அபேயின் கூட்டணிக்கு கடும் சவாலை அளித்து இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 55 இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள 66 தொகுதிகளையும் சிறுசிறு கட்சிகள் கைப்பற்றின.

திடீர் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் ஷின்ஜோ அபே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘நெருக்கடியான சூழ்நிலைகளிலும் ஜப்பானிய மக்களின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்கள் அமைதியாகவும், செல்வச் செழிப்புடன் வாழவும் உறுதியுடன் செயல்படுவேன். வடகொரியாவின் அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளுக்கு ராஜதந்திர ரீதியாக பதிலடி கொடுக்கப்படும். நாட்டில் முதலீடு, கல்வி, உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது ஜனாதிபதி டிரம்பை சந்திப்பேன். அப்போது அவருடன் வடகொரிய விவகாரம் குறித்து முழுமையாக விவாதிப்பேன்’’ என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷின்ஜோ அபேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘பெரும் தேர்தலில் வெற்றி கண்டுள்ள எனது நெருங்கிய நண்பர் ஷின்ஜோ அபேவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். உங்களுடைய இந்த வெற்றியின் மூலம், இந்தியா–ஜப்பான் இடையேயான உறவுகள் மேலும் முன்னெடுத்து செல்லப்படும் என்று எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டு உள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்