Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

தமிழகத்தில் 2012–ம் ஆண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு அதிகம்

Posted On : October 24, 2017
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2012–ம் ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம். இந்த ஆண்டு இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

டெங்கு காய்ச்சலின் தாக்கம் கடந்த ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் இருந்து டெங்கு காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் இருக்கிறது.

இந்த ஆண்டில் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. இதுகுறித்து 5 பேர் கொண்ட மத்திய குழுவினர் தமிழகம் வந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்துவிட்டு புறப்பட்டு சென்றனர். தமிழக அரசும், டெங்குவை கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2012–ம் ஆண்டில் தான் தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த ஆண்டில் டெங்கு அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 826 ஆகும். அந்த ஆண்டில் தான் டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

இந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை தமிழகத்தில் டெங்கு அறிகுறியால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருப்பதாகவும், 45 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்