Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

உலகில் மிகவும் உயரமானது காஷ்மீரில் 19,300 அடி உயரத்தில் புதிய சாலை

Posted On : November 4, 2017

காஷ்மீரின் லடாக் எல்லைப் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு ராணுவ வீரர்களின் போக்குவரத்து வசதிக்காக சிசும்லே கிராமத்தில் இருந்து டெம்சாக் கிராமம் வரை 86 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. இந்தச் சாலை கடல் மட்டத்தில் இருந்து 19,300 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் இங்கு 10 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். குளிர் காலத்தில் மைனஸ் 40 டிகிரி செல்சியசுக்கு கீழாக வெப்பநிலை சென்றுவிடும். இதுகுறித்து எல்லை சாலை கழக (பிஆர்ஓ) திட்ட இன்ஜினீயர் பிரிகேடியர் புர்விமேத் கூறியதாவது: ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி இங்கு பணியாற்ற முடியாது. சாலை பணியாளர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டருடனே பணியாற்றினர். ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒருமுறை ஓய்வு எடுத்துக் கொண்டனர். இருப்பினும் தொழிலாளர்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. இவ்வளவு உயரத்துக்கு சாலை அமைக்கும் உபகரணங்களை எடுத்துச் செல்வது மிகப்பெரும் சவாலாக இருந்தது. தேசத்தின் பாதுகாப்பு கருதி சாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழு உடல் தகுதி இருந்தால் மட்டுமே லடாக் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்