Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

தாழ்வான பகுதியில் வீடு கட்டியதால்தான் வெள்ளம்; பிரதமரிடம் ரூ.1500 கோடி நிவாரண தொகை கேட்டுள்ளோம்: முதல்வர் பழனிசாமி பேட்டி

Posted On : November 6, 2017

தாழ்வான பகுதியில் பொதுமக்கள் வீட்டை கட்டிவிட்டனர். அதனால்தான் வெள்ளநீர் தேங்கியது, படிப்படியாகத்தான் நீரை அகற்ற முடியும் என்று தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிரந்தர வடிகால் அமைக்க ரூ.1500 கோடி கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பிரதமர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் எங்களிடம் கேட்டறிந்தார். அதிகம் பாதிக்கப்படும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிரந்தர வடிகால் அமைக்க ரூ.1500 கோடி மத்திய அரசு ஒதுக்கித்தர கோரிக்கை வைத்தோம்.

மத்திய அரசு தேவையான அளவு நிதி ஒதுக்குவதாகத் தெரிவித்தார். சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதி எது என்றால் தாழ்வான பகுதிகள்தான். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை மின்மோட்டார் மூலம் அகற்றி வருகிறோம். காஞ்சிபுரம், திருவள்ளூரில் எந்தவித அனுமதியும் இல்லாமல் வீடுகளைக் கட்டி குடியேறி உள்ளனர்.

சென்னை நாராயணபுரம் ஏரியின் கீழேயே குடியேறி உள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதால் தான் நீர் தேங்குகிறது. ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்றி வருகிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.5000 வழங்கியது போல் வழங்க முடியாது. அப்போது புயல் அடித்தது. இது பருவமழை. தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும் நீரை அகற்றி வருகிறோம்.

மொத்தம் 315 இடங்களில் தண்ணீர் தேங்கியது. 200 இடங்களில் அகற்றி விட்டோம். மீதமுள்ள 75 இடங்களிலும் பணிகள் முடிந்துவிடடன. இன்னும் 40 இடங்கள் மட்டுமே பாக்கி உள்ளன. தாழ்வான பகுதிகளில் வீட்டைக் கட்டிவிட்டனர், படிப்படியாகத்தான் நீரை அகற்ற முடியும். ஆக்கிரமிப்பை அகற்றத் தேவையான திட்டம் போட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்துவோம்.”

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்