Home / ஆன்மீகம் /

நலம் பல நல்கும் தென்காசி கோவில் – திருநெல்வேலி

Posted On : November 14, 2017

வடக்கில் உள்ள காசியில் ‘இறந்தால்தான் முக்தி’. ஆனால், தென்காசியில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும், கண்டாலும் முக்தி கிடைக்கும்.

பழங்காலத்தில் தென்காசி, செண்பக வனமாக இருந்தது. தென்காசிக்கு அருகிலிருந்த விந்தன்கோட்டை என்ற இடத்திலிருந்து தென்காசிப்பகுதியை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். அப்போது ஆண்டுவந்த குலசேகர பாண்டியன், மழலைச் செல்வம் இல்லாமையால் வருந்தினான்; சிவனை வேண்டினான்.

சிவன், ‘செண்பகத்தோப்புக்கு வந்து வழிபடு’ என்றார். அவ்வாறே செய்தான் பாண்டியன். அதன்பிறகே அவனுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு உலகநாத பாண்டியன் என்று பெயர் வைத்தான். உலகநாதனுக்குத் திருமணம் முடித்து வைத்தான் குலசேகரன். உலகநாதனுக்கும் குழந்தை இல்லை.

தந்தையின் சொல்படி உலகநாதனும், காசி விசுவநாதரை கசிந்துருகி வேண்டினான். அதன்பலனாக செண்பகத்தோப்பில் ஒரு சிறிய பெண் குழந்தையைக் கண்டான். பராசக்தியின் வடிவமான அந்தக் குழந்தைக்குக் ‘குழல்வாய் மொழி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.

பருவமடைந்த அந்தப்பெண் சிற்றாற்றங்கரையில் சோலை அமைத்து, சிவபெருமானை வழிபட்டு, ‘இறைவா! உன்னையே கணவனாக அடைய வேண்டும்’ என்று வேண்டியது. இறைவன், “ஐப்பசி உத்திர நாளில் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறி, அதன்படியே குழல்வாய்மொழியைத் திருமணம் புரிந்து கொண்டார். திரு மணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கோவிலுக்குள் சென்று மறைந்தனர்.

குலசேகர பாண்டியனின் பேரன் பராக்கிரம பாண்டியன். முருக பக்தனான பராக்கிரம பாண்டியன் தினமும் காசிக்குச் சென்று வழிபட எண்ணினான். ஒருநாள் முருகப்பெருமான் தோன்றி, இவன் கையில் ஒரு ககனக் குளிகையைக் கொடுத்தார். ககனக்குளிகையை வாயில் இட்டால் யாருக்கும் தெரியாமல் வானில் பறக்கும் ஆற்றல் வந்துவிடும். ககனக்குளிகையினை வாய்க்குள் வைத்துக்கொண்டு விந்தன்கோட்டையில் இருந்து வான்வழியாக அதிகாலை 4 மணிக்கு காசி நகருக்குச் சென்று காசி விசுவநாதரை தினமும் வழிபட்டு, சூரிய உதயத்திற்கு முன்னர் கோட்டைக்கு வந்துவிடுவது அவனது வழக்கம்.

ஒருநாள் அரசி தானும் வருவதாகக் கூறியதால், அவளையும் அழைத்துச் சென்றான். திரும்பி வரும்போது ஒரு சிவலிங்கத்தையும் எடுத்து வந்தான். அப்போது அரசி உடல் நிலை பாதிக்கப்பட்டாள். எனவே இருவரும் ஒரு சோலையில் இறங்கினர். மூன்று நாட்களில் உடல்நிலை சரியானதும், அங்கிருந்து புறப்படத் தயாரானார்கள். தாங்கள் கொண்டுவந்த லிங்கத்தை, வைத்த இடத்திலிருந்து எடுக்க முயன்றபோது எடுக்க இயலவில்லை. இருவரும் வருந்தினர். அச்சமயம், ‘இந்த லிங்கம் இச்சோலையிலேயே இருக்கட்டும்’ என்று இறைவன் அசரீரியாக ஆணையிட, இருவரும் அந்த லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து அதற்கு ‘சிவகாசி என்று பெயரிட்டு விந்தன் கோட்டைக்குத் திரும்பினர்.

கோட்டை வந்த மன்னன் தமக்கும் ஒரு சிவலிங்கம் வேண்டும் என்றும் அதற்கு காசி விசுவநாதர் என்ற பெயரே சூட்டப்பட வேண்டும் என்றும் கோவிலும் எழுப்பிக்க வேண்டும் என்றும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

இந்நிலையில், ஒருநாள் அரசன் கனவில், இறைவன் அந்தணர் வடிவில் வந்து, ‘வடக்கே காசியிலுள்ள கோவிலை பகைவர்கள் அழித்துவிட்டமையால், தெற்கே தமக்குக் கோவில் கட்டித் தரவேண்டும்’ என்று ஆணையிட்டார். மேலும், ‘உன் மூதாதையர்கள் வழிபட்ட சிவலிங்கம் செண்பக வனத்தில் உள்ளது. கோட்டையிலிருந்து சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் கட்டெறும்பு வரிசை எங்கு முடிகிறதோ அங்கு லிங்கம் உண்டு. அந்த இடத்தில் கோவில் கட்டுவாயாக’ என்றார்.

உடனே கண் விழித்த மன்னன் கட்டெறும்பு வரிசையைப் பின் தொடர்ந்தான். எறும்புக்கூட்டம் சிற்றாற்றின் கரையிலுள்ள செண்பகத் தோட்டத்திற்குள் சென்று நின்றது. அங்கே தெய்வீகக் காட்சியைக் கண்டான்.

செண்பகத்தோப்பில் கோவில் கட்டக் கருதினான் பராக்கிரமன். இதற்காக இந்தத் தோப்புக்கு வடக்குப்புறமாக ஓடிய சிற்றாற்றைத் தெற்குப்புறமாக ஓடச்செய்தான். முதலில், ‘சிவமது கங்கை’ என்றும் அழைக்கப்படும் சிற்றாற்றங்கரையில் ‘காவேரி கங்கை’ அம்மனுக்கு கோவில் அமைத்தான். அங்கு விநாயகரையும் எழுந்தருளச் செய்தான்.

இதன்பின் ஈசனுக்கு கோவில் எழுப்ப நாள் குறிக்கப்பட்டது. 1368-ம் ஆண்டு வைகாசி மாதம் 10-ம் நாள், தசமி திதி, வெள்ளிக்கிழமை, உத்திர நட்சத்திரமும் மீன லக்னமும் கூடிய சுபயோக சுப தினத்தில் புதிய கோவிலுக்கு அஸ்திவாரம் இடப்பெற்றது. வடக்கே உள்ள காசியில் இருப்பதைப் போன்று கருவறையை அகலமாக அமைத்து சிவலிங்கத் திருமேனியை சுற்றிவர வசதியாக இடம் அமைத்தான். காசியிலுள்ள லிங்கத்தைப் போன்று காட்சி தரும் இப்பெருமான் ‘ரிக் வேத பெருமான்’ எனப் போற்றப்படுகிறார். கருவறையில் இருக்கும் சிவலிங்கத்தை மன்னன் கோட்டையிலிருந்தே வழிபடுவதற்கேற்ப தன் கோட்டையை அமைத்திருந்தான்.

பிற கோவில்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு இத்திருக்கோவிலுக்கு உண்டு. இரண்டு பெரிய யானைகள் பெரும்தேர் ஒன்றை இழுத்துச் செல்லும் வண்ணம் இக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் சிற்பங்கள் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிப்பெருமையாகும். ஒன்பது நிலைகளுடன் 178 அடி உயரம் கொண்ட இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் அடி முதல் முடிவரை 800 கவின்மிகு சுதைச்சிற்பங்கள் உள்ளன.

ராஜகோபுரத்திற்கு முன் அகன்ற வெளித்திடல் உள்ளது. கோபுரத்தின் வடக்குப் பகுதியில், கிழக்கு முகமாக நின்ற திருக்கோலத்தில், எட்டுக்கரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி, மங்கையரின் மாங்கல்யம் காக்கும் தாயாக அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், சூழ்ச்சி, வீண்பழி ஆகியவற்றிலிருந்து பக்தர்களைக் காத்து வருகிறாள்.

முகப்பு மண்டபத்தின் தெற்கு வரிசையில் மேற்கிலிருந்து கிழக்காக அகோர வீரபத்திரர், மன்மதன், திருமால், காளி சிலைகளும், வடக்கு வரிசையில் மேற்கிலிருந்து கிழக்காக வீரபத்திர சட்டைநாதர், ரதி, பதஞ்சலி – புலிக்கால் முனிவருடன் அமைந்த மகாதாண்டவமூர்த்தி, ஊர்த்துவ தாண்டவமூர்த்தி ஆகிய சிலைகளும் உள்ளன. மண்டபத்தின் முன்னர் சன்னிதியை நோக்கி இரு பக்கத் தூண்களிலும் இரண்டு அழகிய பெண்களின் சிலைகளும் வடிக்கப்பெற்றுள்ளன. தென்காசிக்கு ஒப்பான தலம் உலகில் இல்லை என்பதற்கு இந்தச் சிற்பங்களும் ராஜகோபுரமும் சான்றாக உள்ளன.

கருவறையில் கருணையே வடிவாய் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதரை தரிசித்து, தென்வரிசையில் இருக்கும் சந்திரசேகரரையும், வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கி நின்றாடும் நடராஜப் பெருமானையும், பராக்கிரம பாண்டியனையும் வணங்கி பிரகாரத்திற்குள் வலம் வர வேண்டும்.

ஈசனுக்கு வலப்புறம் தனிச்சன்னிதியில் அபய வரத ஹஸ்தங்களுடன் உலகம்மை பத்மபீடத்தில் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

பிரகாரத்தில், மூன்று கால்கள், மூன்று கைகள், பெரிய திருமேனியுடன் இயற்கைக்கு மாறாகக் காட்சி தரும் சுரதேவரை சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் மிகுதியான காய்ச்சல் குணமாகும் என்பது நம்பிக்கை.

வடக்குப் பிரகாரத்தில் பராக்கிரம பாண்டியன் காசிக்கிணற்றை அமைத்துள்ளான். கங்கைக்கும் இந்தக் கிணற்றுக்கும் தொடர்பு உண்டாம். இக்கிணற்றில் கங்கை எப்போதும் சுரந்துகொண்டே இருக்குமாம்.

வெளிப்பிரகாரத்தில் வீற்றிருக்கும் பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். முகப்பு மண்டபத்தில் துர்க்கை சன்னிதியும் நவக்கிரகங்களும் உள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்ஷம் ஆகிய நான்கு அம்சங்களால் சிறப்புப் பெற்றது தென்காசி.

வடக்கிலுள்ள காசியைவிட தெற்கிலுள்ள இந்த தென்காசி புனிதமானது என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. வடக்கில் உள்ள காசியில் ‘இறந்தால்தான் முக்தி’. ஆனால், தென்காசியில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும், கண்டாலும் முக்தி கிடைக்கும். விசுவநாதரையும் உலகம்மையையும் வழிபடுவோருக்கு இன்பம் ஓங்கும். துன்பம் நீங்கும். பகை அழியும். வெற்றி கிட்டும். அறிவுநிலை பெருகும். திருமணம் நிகழும். பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பிணி எல்லாம் தீரும். வறுமை நீங்கும். பெருமை சேரும். பேறுகள் அத்தனையும் கிட்டும்.

Comments

தொடர்புடைய செய்திகள்