Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

அடிப்படை வசதிகளை செய்து தராத அமர்நாத் ஆலய நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கோர்ட் கண்டனம்

Posted On : November 15, 2017

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.

இந்த மலைப்பாதையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவும், யாத்ரீகர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் அமர்நாத் ஆலய நிர்வாகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசுக்கு அறிவுறுத்தி கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சமூக ஆர்வலர் கவுரி மவுலேகி என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய தலைவரான நீதிபதி சுவதந்தர் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பெண்கள் உள்பட யாத்ரீகர்களுக்கு போதுமான கழிப்பறை வசதிகளை செய்து தராததுடன், பாதையில் புதிய கடைகள் வைக்கவும் நீங்கள் அனுமதித்ததன் மூலம் யாத்ரீகர்களின் வசதியைவிட வர்த்தக நோக்கங்களுக்கு மட்டுமே ஆலய நிர்வாகம் முன்னுரிமை அளிப்பது நியாமாக இல்லை. ஆலயத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என கண்டனம் தெரிவித்த நீதிபதி சுவதந்தர் குமார், கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த பின்னர் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அமர்நாத் ஆலய நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பாதைகளில் அமர்நாத் யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது, பசுமை கழிப்பறைகளை உருவாக்குவது, சுற்றுப்புற தூய்மையை பாதுகாப்பது தொடர்பாக செயல் திட்டம் ஒன்றை உருவாக்க ஜம்மு-காஷ்மீர் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைவர் தலைமையில் புதிய குழு ஒன்றை அமைத்தும், இந்த குழுவினர் உரிய ஆய்வுகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்