Home / ஆன்மீகம் /

கொட்டும் மழையிலும் சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

Posted On : November 16, 2017

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜைக்காக கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று புதிய மேல்சாந்திகள் பதவியேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று மண்டல பூஜை தொடங்கியது. 3.30 மணி முதல் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 11.30 மணி வரை நெய் அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5.30 மணி முதல் சுவாமி ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக நேற்று சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவித்திருந்தனர். சபரிமலையில் தற்போது மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

வழக்கமாக நடை திறந்து 10 நாட்களுக்கு பிறகுதான் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் வரும். ஆனால் இந்த ஆண்டு முதல் நாளிலேயே கூட்டம் அலைமோதியது. வருகிற டிசம்பர் மாதம் 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றிரவு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் புனித நீராடும் பம்பை நதிக்கரையிலும் பாதுகாப்புக்காக தடுப்பு சங்கிலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பிரசாதம் 2.50 லட்சம் டின்களும், அப்பம் பாக்கெட்டுக்கள் 1.50 லட்சம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இந்த ஆண்டு பிரசாதங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால் அப்பம் பிரசாதம் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதில் துணிப் பையில் வைத்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் நடைபெறும் முக்கிய பூஜையான படி பூஜைக்கு 2033-ம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இதைபோல சகஸ்ர கலச பூஜைக்கு 2022 வரையும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்