எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை சுதந்திர தினத்திற்கு முன் வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னர் வலுவான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது தேர்தல் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட  சுயாதீன தேரதல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் சட்டமாதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்துக்கொண்டமை முக்கிய அம்சமாகும்.

தேர்தல் குறித்து இங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இருதரப்பிற்கு கசப்புணர்வுகளை வலுப்படுத்தியுள்ளது. 93 சபைகளுக்குமான தேர்தல் ஒரு புறம் பிரதான கட்சிகளின் மக்கள் செல்வாக்கை ஆழம் பார்க்க கூடியதாக இருந்தாலும் நல்லாட்சி பங்காளிகளுக்கு இடையிலான முறுகலை அதிகரித்துள்ளதாகவே காணப்படுகின்றது.

வீட்டுச் சண்டை வீதிக்கு வந்துள்ள நிலையே நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைமை காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காலம் கடத்தப்பட்டது. இது திட்டமிட்ட அரசியல் நோக்குடன் செய்யப்பட்ட விடயமாகும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலை காலம் கடத்த வேண்டிய தேவை நல்லாட்சிக்குள் எத்தரப்பிற்கு தேவைப்பட்டது என்ற கேள்வி உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்திரமான நிலையிலேயே உள்ளது. ஆனால் சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு ஆளும் தரப்பை எதிரணியில் வலுவடையச் செய்தது. அதே போன்று சுதந்திர கட்சியின் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் எதிரணியின் நல்லாட்சிக்கு எதிரான செயற்பாடுகளை காரணம் காட்டி வீண் அச்சத்தை சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்திற்கு ஏற்படுத்தியது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் காலம் கடத்தப்பட இது ஒரு முக்கிய காரணமாகும். கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற சுந்திரக்கட்சி உறுப்பினர்களின் முக்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நல்லாட்சி பங்காளிகளுக்குள் கடும் மோதல்களுக்கு காரணமாகியள்ளது. டில்லியில் இருந்து நேரடியாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளுடன் தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிக்கவரெட்டியவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி ,

ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகி போராட்டத்தை முன்னெடுப்பதாக நேரடியாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்தார். மறுபுறம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சியை இணைத்துக்கொண்டு புதிய பயணத்தை தொடர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதாயின் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து மஹிந்த அணி முன்வைத்துள்ளது.

அதாவது ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளிப்பட வேண்டும் . எதிர்க்கட்சி தலைவர் பதவி அல்லது பிரதமர் பதவியை தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று விடயத்தில் எதனையாவது ஒன்றை நிறைவேற்றும் நோக்கம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதாவது எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் ஆட்சியை விட்டு வெளியேறுதல் இவை இரண்டையும் விட அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான உறுதியை மஹிந்த அணிக்கு வழங்க முடியும்.

இதனையே சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனையாக கூறி வருகின்றனர். 2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட ரணில் – மைத்திரி நெருக்கம் தற்போது விரிசல் அடைந்துள்ளது. மறுபுறம் மஹிந்தவிற்கும் – மைத்திரிக்கும் இடையில் காணப்பட்ட விரிசல் தற்போது குறைவடைந்து இணக்கப்பாட்டு நிலைக்கு வந்துள்ளது. இந்த எல்லைக்குள் தான் நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்காலமும் உள்ளது.