Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஆர்.கே.நகர் வேட்பாளரை சசிகலா முடிவு செய்வார்: திருச்சி ஆலோசனை கூட்டத்தில் தினகரன் அறிவிப்பு

Posted On : November 28, 2017

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்தபின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு, அன்று மாலையே அவைத் தலைவரால் அறிவிக்கப்படுவார் என்று தினகரன் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன், ரங்கசாமி, கென்னடி மாரியப்பன் மற்றும் நாஞ்சில் சம்பத், திருச்சி மாவட்ட செயலாளர்கள் மனோகரன், சீனிவாசன், ராஜசேகரன் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தும், எச்சரித்தும் பேசினர். மேலும் ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பின்னர் கூட்டத்தில் தினகரன் பேசியதாவது:-

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சசிகலாவிற்கு துரோகம் இழைத்து விட்டனர். துரோகம் இழைத்தவர்கள் வென்றதாக வரலாறு இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வெளியாகும், எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24-ந்தேதி உண்மையான அ.தி.மு.க. யார் என்பது தெரியவரும். அன்று கட்சி, சின்னம், கொடி என அனைத்தும் நம்மிடம் வரும்.

இதனிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று அல்லது நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும். நாளை 29-ந் தேதி பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க உள்ளேன்.

அப்போது ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு, அன்று மாலை சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அவைத் தலைவரால் அறிவிக்கப்படுவார். டிசம்பர் 1-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்யப்படும். அன்று மாலையே பிரச்சாரம் தொடங்கப்படும். தேர்தல் பணிக்காக 12 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் முடிந்த பின்பு டி.டி.வி.தினகரன் நிருபர்களை சந்திப்பதாக இருந்தார். ஆனால் அவர் நிருபர்களை சந்திக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த நிருபர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் தகவல் தொழில் நுட்ப பிரிவினர் கூட்டத்தில் பங்கேற்க வந்த நிர்வாகி ஒருவர் மைக்கில் நிருபர்களை பார்த்து நீங்கள் எதிர்பார்த்தது நடக்காது என ஏளனமாக பேசியுள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்கள் ஒன்று திரண்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

தொடர்புடைய செய்திகள்