Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

பெங்களூரு அருகே மாயமான 2 எருமைகள்: பேஸ்புக் மூலம் உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைப்பு

Posted On : December 2, 2017

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த ஒசக்கோட்டை அருகே உள்ள இஸ்ட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (29).

கடந்த சில தினங்களுக்கு முன்பு தன் வீட்டின் அருகே 2 எருமைகள் புதிதாக மேய்வதை பார்த்தார். இரவு பகலாக அந்த எருமைகள் அங்கே மேய்வதை கண்ட நாகேஷ், அவை வழி தவறி வந்ததை கண்டறிந்தார். அதன் பிறகு 2 எருமைகளையும் புகைப்படம் எடுத்து, தனது பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அந்த புகைப்படங்களுக்கு, “இந்த 2 எருமைகள் யாருடையவை? உரிமையாளரை சென்றடையும் வரை ஷேர் செய்யுங்கள்‘ என்று தலைப்பிட்டு வெளியிட்டார்.

இதனை நாகேஷின் நண்பர்கள் நூற்றுக்கணக்கானோர் பேஸ்புக்கில் பகிர்ந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் கண்ட எருமையின் உரிமையாளர் நாராயணசாமி ஆச்சரியம் அடைந்தார்.

உடனடியாக பேஸ்புக் மூலம் நாகேஷை தொடர்பு கொண்டு வி‌ஷயத்தை எடுத்து கூறினார். பின்னர் தன் வீடு உள்ள நந்தகுடி ஹூப்ளியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இஸ்ட்டூர் நகருக்கு சென்றார். அங்கு நாகேஷின் வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருந்த 2 எருமைகளை கண்டதும் மகிழ்ந்தார். பின்னர் 2 எருமைகளுக்கு தான்தான் உரிமையாளர் என்று கூறி, அதற்கான புகைப்பட ஆதாரங்களை நாகேஷிடம் வழங்கினார்.

இதையடுத்து நாகேஷ் 2 எருமைகளையும் அதன் உரிமையாளர் நாராயணசாமியிடம் ஒப்படைத்தார். 10 நாட்களுக்கு பிறகு எருமைகள் வாகனம் மூலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதனை புகைப்படமாக எடுத்த நாகேஷ், “வழி தவறிய எருமைகள் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன’ என்று தலைப்பிட்டு பகிர்ந்தார். இந்த புகைப்படம் பேஸ்புக்கில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்