Home / உலகம் / தொழில்நுட்பம் /

பழைய விலையில் கூடுதல் டேட்டா: ஏர்டெல் அதிரடி?

Posted On : December 5, 2017

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் தங்களது சலுகை திட்டங்களை மாற்றி வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது திட்டங்களை மாற்றியமைத்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.349 மற்றும் ரூ.549 திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது. முன்னதாக ரூ.349 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தற்சமயம் இதே திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதேபோல் ரூ.549 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம்  தினமும் 3.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இத்துடன் வழக்கமான அன்லிமிட்டெட் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகையும் வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய மாற்றங்களின் படி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.346 திட்டத்தில் 56 ஜிபி டேட்டாவும், ரூ.549 திட்டத்தில் 84 ஜிபி டேட்டாவும் பெறலாம். ஏர்டெல் ரூ.349 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை இரண்டு முறை இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.349 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. தற்சமயம் இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.999 விலையில் சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 50 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் இலவச ரோமிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ‘மை இன்ஃபினிட்டி திட்டம்’ கீழ் வழங்கப்படுவதால் புதிய மற்றும் பழைய ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த திட்டத்தில் டேட்டா ரோல்ஓவர் எனும் சலுகை வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தாத டேட்டாவினை அடுத்த மாதத்திலும் பயன்படுத்த முடியும். இத்துடன் திட்டத்தில் வழங்கப்படும் 50 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும், ஒரு எம்.பி. டேட்டாவுக்கு 50 பைசா வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் இரண்டு சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதிய திட்டம் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. இதனால் புதிய சலுகை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்துமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்