Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம்: அமித்ஷா உட்பட 139 பேருக்கு நட்சத்திர பேச்சாளர் அனுமதி

Posted On : December 7, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அமித்ஷா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் உட்பட 139 பேரை நட்சத்திரப் பேச்சாளர்களாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தல் நடக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை நட்சத்திர பேச்சாளர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். அவ்வாறு அங்கீகரித்து அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கான பயணச் செலவு, வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கான செலவுகள் வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேராது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் பாஜக, அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 139 பேருக்கு தேர்தல் ஆணையம் நட்சத்திர பேச்சாளர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாஜக சார்பில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 26 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதிமுகவில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 18 அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேருக்கும் திமுகவில் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உட்பட 27 பேருக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது தவிர பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 19 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்