Home / ஆன்மீகம் /

காவல் காக்கும் காஞ்சமடை அய்யனார் கோவில்

Posted On : December 7, 2017
முன் காலத்தில், நெல் மூட்டையை மாட்டு வண்டியில் அடுக்கினார், ஒரு விவசாயி. ஆனால் வண்டியின் முன் பகுதியில் பாரம் குறைவாக இருந்தது. எனவே ஒரு பெரிய கல்லை எடுத்து முன்பகுதியில் வைத்தார். பிறகு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். வழியில் அந்தக் கல் ஒரு திடலில் விழுந்தது. விழுந்த கல்லை மீண்டும் எடுக்க முயன்றார் விவசாயி. ஆனால் முடியவில்லை.
சிலரை துணைக்கு அழைத்தார். பல பேர் இணைந்தும் அந்தக் கல்லை அசைக்க முடியவில்லை. அது தெய்வ சக்தி மிகுந்த கல் என்று, ஒரு சிற்பியை அழைத்து வந்தனர். அவர் அந்தக் கல்லில் ஒரு சிலையை வடித்தார். ஒரு உருவம் கிடைத்தது. அதே இடத்தில் ஓலைக் குடிசை போட்டு ஆலயம் அமைத்தனர். அதுதான் அய்யனார் ஆலயம்.
ஓலைக் குடிசை என்பதால் அது சேதமடைந்து விட்டது. அதனால் அய்யனார், மழையில் நனைந்தார்; வெயிலில் காய்ந்தார்.
ஒரு நாள் அந்த பகுதி விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய அய்யனார், “வயல்வெளித் திடலில் கேட்பாரற்று நான் கிடக்கிறேன். எனக்கு ஒரு ஆலயம் கட்டுங்கள். உங்கள் ஊரைக் காப்பவன் நான்” என்றார்.
திடுக்கிட்டு விழித்த விவசாயி, நடந்ததை ஊர் மக்களிடம் கூறினார். ஊர் மக்கள் ஒன்று கூடி வயல் வெளிகளுக்கு இடையே திடலில் வெயிலிலும் மழையிலும் காய்ந்து கொண்டிருந்த அந்தச் சிலையைப் பார்த்தனர். அனைவரும் ஒன்று கூடி அய்யனாருக்கு ஆலயம் கட்டி முடித்தனர்.
ஆலய அமைப்பு :
திருச்சிற்றம்பலம் – குமார மங்கலம் சாலையில் உள்ளது இந்த காஞ்சமடை அய்யனார் ஆலயம். மேற்கு திசை நோக்கிய கோவில் முகப்பில் மகாமண்டபம். அதன் எதிரே யானை மற்றும் பலிபீடம் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப வாசலில் பிள்ளையார் திருமேனி இருக்கிறது.
கருவறையில் புராண அய்யனார் சிலையுடன், புதிதாக பிரதிஷ்டை செய்த அய்யனார் சிலையும் இணைந்திருக்கிறது.
ஆலயத்தின் வெளியே, கருவறைக்கு எதிரே பெரிய குதிரைச் சிலை உள்ளது. அருகே சங்கிலி கருப்பண்ணன் திருமேனி காணப்படுகிறது. ஆலயத்தின் வலது புறம் வீரன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். தினசரி மாலை சூரியன், தன் பொற்கதிர்களால் அய்யனாரை தழுவுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
தினசரி இங்கு ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. விநாயக சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் மாதப் பிறப்புகள், நவராத்திரி, சிவராத்திரி, மாசி மகம் போன்ற நாட்களில் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு செல்லும் ஊர்மக்கள், முதலில் இங்கு வந்து அய்யனாரை தரிசித்துவிட்டு, பின்னரே இரு முடிகட்டும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. வெளி நாட்டிற்கு பணி நிமித்தம் செல்வோர் இங்கு வந்து அய்யனாரை தரித்த பின்னரே புறப்படுகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை அய்யனாரிடம் சமர்ப்பிக்கும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை பலித்ததும் இறைவனுக்கு சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி, திரவியப் பொடி, பன்னீர், எலுமிச்சை, தயிர், நார்த்தங்காய், ஜல திரவியம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து மனம் மகிழ்கின்றனர்.
எந்த துயர் வந்தாலும் தங்களை அய்யனார் காப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜமே!.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பந்தநல்லூர் செல்லும் வழித் தடத்தில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது அய்யனார் ஆலயம்.

Comments

தொடர்புடைய செய்திகள்