Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட பிரச்சாரம் நிறைவு

Posted On : December 7, 2017

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் சூடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பல பத்தாண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் விதமாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் உள்பட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில், ராஜ்காட், போர்பந்தர், நர்மதா, சூரத், ஜாம்நகர், கட்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.

எனவே, இந்த மாவட்டங்களில் பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் முகாமிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். 9-ம் தேதி நடக்கும் முதல் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாலை 5 மணிக்குள் தங்கள் பிரச்சாரங்களை முடித்துக் கொண்டனர்.

இதையடுத்து, முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் வெளியாகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்