Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

கொடிநாள் நிதி நன்கொடையை மக்கள் வாரி வழங்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி அழைப்பு

Posted On : December 7, 2017

‘‘படைவீரர் கொடிநாள் நிதிக்கு நன்கொடையை வாரி வழங்கி முன்னாள் படைவீரர்கள் நலன் காப்போம்’’ என்று முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட கொடிநாள் செய்தி: முப்படை வீரர்களின் மகத்தான சேவையை நினைவு கூரும் வகையில் முப்படையினர் கொடிநாள் ஆண்டு தோறும் டிச.7-ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

நாட்டுக்கு சேவை செய்ய இளம் ஆண்கள் மற்றும் பெண்களை இந்திய ராணுவப்படைக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான மரபை தமிழகம் கொண்டுள்ளது. தமிழக இளஞ்சிறார்கள் மத்தியில் வீரத்தை விதைத்து, படைப்பணியில் அலுவலர்களாக சேரும் இளைஞர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். இப்படை வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்ற ஏதுவாக, அவர்கள் குடும்பத்தினருடன் இல்லாத போதும், குடும்பத்தை காப்பதும், தங்கள் ஓய்வுக்காலத்தை அமைதியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கழிப்பதற்கு வழி செய்வதும் இன்றியமையாததாகும்.

முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்காக தமிழ்நாடு அரசின் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்காகவே கொடிநாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாக பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் வசூல் இலக்கை மிஞ்சி தமிழக மக்கள் ஈகையில் சிறந்தவர்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். தேசிய அளவில் மக்கள் தொகை அடிப்படையில் கொடிநாள் நிதி வசூலில் தமிழகம் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இது தமிழக மக்களின் ஈகை குணத்துக்கு வழங்கப்பட்ட நற்சான்றாகும். எனவே, இவ்வாண்டும் படைவீரர் கொடிநாள் நிதிக்கு நன்கொடையை வாரி வழங்கி படைவீரர் நலன் காப்போம்.

இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார்.

Comments

தொடர்புடைய செய்திகள்