Home / ஆன்மீகம் /

சபரிமலையின் 18 படிகளின் மகத்துவம்

Posted On : December 7, 2017
சபரிமலையின் 18 படிகள் மிகவும் தெய்வ முக்கியத்துவம் வாய்ந்த புராதன வரலாறு கொண்டதாகும். பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பே பரசுராமரால் அகத்தியர் முன்னிலையில் பந்தள ராஜாவால் இந்த 18 படிகள் கட்டப்பட்டது. இந்த 18 படிகள் மூலமாகத்தான் மணிகண்டனாகிய ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு ஏறிச்சென்று அங்கு ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஐயப்ப விக்ரகத்தில் ஐக்கியமானார்.
சத்திய தர்மங்கள் வடிவில் கடுத்தசாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்மாள் ஆகியோர் காவல் தெய்வங்களாக காத்து வருகின்றனர். மனதில் பக்தியின்றி நியமநிஷ்டங்களை குறைவாக கொண்ட பக்தர்கள் அந்த 18 தேவதைகள் மீது கால் வைக்க நினைத்தால், மேல் சொன்ன காவல் தெய்வங்கள், அத்தகைய பக்தர்களுக்கு துன்பங்களையும், கஷ்டங்களையும் ஏற்படுத்துவார்கள்.
இந்த படிகளுக்கு ‘தந்திர’ முறையில் மாதா மாதம் பூஜை செய்து அந்த படிகளின் மகிமையையும், புனிதத் தன்மையையும் புனருதாருணம் செய்கின்றனர். சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும். இந்து மத ஆசாரப்படி சபரிமலைக்கு போகும் முன்பு சில முக்கிய கோயில்களை (ஷேத்திரங்களை) தரிசனம் செய்துவிட்டு போக வேண்டும். சபரிமலை 18 படியிலும், 18 வன தேவதைகள் குடி கொண்டிருக்கின்றனர். 18 தேவதைகளையும் படியில் ஆவாஹணம் செய்து அவர்களை பூஜிப்பது தான் படிபூஜை.
புலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, ஆங்காரம் ஒன்று, இவைகளைக் கடந்து ஐயப்பனை காண வேண்டும் என்ற கருத்தின்படி 18 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர 18 என்ற எண்ணுக்கு வேறு சில சிறப்புகளையும் கூறுவர். மொழி 18, ராகம் 18, சித்தர்கள் 18 பேர், கீதையின் அத்தியாயம் 18, மகாபாரத யுத்தம் நடந்தது 18 நாட்கள் இப்படி 18 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உள்ளன.
இந்த 18-ம் படியை தங்க கவசம் இட்டு தகடு வேயும் பணி 1985 அக்டோபர் 30-ல் நடந்தது. இதற்காக திருவாங்கூர் தேவஸ்தானத்தினர் 10 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளி மற்றும் பித்தளை, ஈயம், செம்பு போன்ற உலோகங்களையும் கொடுத்தனர். தற்சமயம் படிகளில் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை. பக்கவாட்டில் சுவரில் உடைக்க வேண்டும்.
பதினெட்டு படிகளுக்கு பலவிதமான தத்துவங்கள் இருக்கின்றன.
* ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளை வைத்து 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவை வில், வாள், வேல் கதை, அங்குசம், பரசு. பிந்திபாவம், பரிசை, குந்தகம், ஈட்டி, கைவாள், சுக்குமாந்தடி, கடுத்திவை, பாசம், சக்கரம், ஹலம், மழுக், முஸல ஆகிய 18 போர் கருவிகள் ஆகும்.
* 18 படிகளை 18 வகை தத்து வங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.
* மெய், வாய், கண், மூக்கு, செவி, சினம், காமம், பொய், களவு, வஞ்சநெஞ்சம், சுயநலம், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்ர, தாமஸ, ராஜஸ என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனை காணலாம் என்று கூறப்படுகிறது.
* கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும். சபரிமலையைச் சுற்றி 18 மலைகள் உள்ளன. அந்த 18 மலை தெய்வங்கள் 18 படிகளாக, ஐயப்பன் சன்னதிக்கு முன்பாக இருப்பது மிகவும் விசேஷமானது.

Comments

தொடர்புடைய செய்திகள்