Home / சினிமா / இந்திய சினிமா /

விஷாலுக்கு மீண்டும் வாய்ப்பு: பின்வாங்கிய 2 பேர் மீண்டும் வந்து விளக்கினால் பரிசீலனை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted On : December 7, 2017

வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் மாநிலத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் முறையிட்டார். இதையடுத்து அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்காக முன் மொழிந்து பின் மறுத்த 2 பேரும் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டால் மனுவை ஏற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீரென போட்டியிட்டார். அவரது வேட்பு மனு பரிசீலனையின் போது புதிய பிரச்சினை எழுந்தது. அவருக்காக முன் மொழிந்த 10 பேரில் தீபக், சுமதி ஆகிய 2 பேர் திடீர் என தேர்தல் ஆணையத்தில் தாங்கள் விஷாலை முன்மொழியவில்லை எனக் கடிதம் கொடுத்தனர்.

இதனால் குழப்பம் ஏற்பட்டது. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விஷால் பின்னர் அவர்கள் மிரட்டப்பட்டதாக முறையிட்டு ஆடியோ ஒன்றை அதிகாரிகள் முன்பு தாக்கல் செய்தார். பின்னர் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாக விஷால் பேட்டி அளித்தார். ஆனால் இரண்டு மணி நேரத்தில் விஷால் மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் கொதிப்படைந்த விஷால் இது குறித்து மாநிலத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் முறையிட்டார். இதையடுத்து விஷாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி முன் மொழிந்து மறுத்த இரண்டு பேரும் மீண்டும் தேர்தல் அதிகாரி முன்பு மாலை 3-00 மணிக்குள் ஆஜராகி முன் மொழிவதாக அறிவித்தால் மனுவை ஏற்றுக்கொள்வோம் என்று விஷாலுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் தீபக், சுமதி இருவரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை, அவர்கள் எனக்காக ஆஜராவதை விட அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாமல் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதே என் முதல் எண்ணம் என்று விஷால் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களை ஆஜர்படுத்த விஷால் தரப்பால் முடியாது போனால் வேட்பு மனு தள்ளுபடி உறுதியாகும்.

Comments

தொடர்புடைய செய்திகள்