Home / விளையாட்டு /

ஐ.எஸ்.எல் கால்பந்து: கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவுசெய்தது சென்னையின் எப்.சி.

Posted On : December 8, 2017

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 18-வது லீக் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. முதல் இடத்திற்கு முன்னேறியது.

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று மாலை நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சென்னையின் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

தனது முதல் ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி அதன் பிறகு கவுகாத்தி, புனே அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு டிரா மற்றும் ஒரு தோல்வியை கண்டுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி ஒரு முறையும், கொல்கத்தா அணி 4 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதி நேரத்தில் கோல் ஏதும் விழவில்லை. இருப்பினும் இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. இரு அணியினரும் மாறி மாறி கோல் அடித்து அசத்தினர்.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஜேஜே லால்பெக்லுவா ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 77-வது நிமிடம் கொல்கத்தா வீரர் செகியூன்ஹா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன்பின் 84-வது நிமிடம் சென்னையின் எப்.சி. அணியின் இனிகோ கால்டெரான் கோல் அடித்து சென்னை அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். தொடர்ந்து 89-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் நிஜசி கூகி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் மீண்டும் சமனானது.

அதைத்தொடர்ந்து 90-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஜேஜே லால்பெக்லுவா தனது இரண்டாவது கோலை அடித்தார். அதன்பின் கொல்கத்தா மேற்கொண்டு கோல் அடிக்காததால் இந்த கோல் சென்னை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் சென்னையின் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை தோற்கடித்தது. 4-வது லீக்கில் ஆடிய சென்னையின் எப்.சி. அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் எடுத்துள்ள சென்னையின் எப்.சி. அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. நாளை கவுஹாத்தியில் நடைபெறும் 19-வது லீக் போட்டியில் பெங்களுரூ எப்.சி – நார்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.

Comments

தொடர்புடைய செய்திகள்