Home / விளையாட்டு /

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை நாளை மோதல்

Posted On : December 9, 2017

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை நடக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது.

கேப்டன் வீராட் கோலி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடவில்லை. அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒய்வு கொடுக்கப்படுகிறது. அவர் டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

வீராட்கோலி இல்லாததால் ரோகித்சர்மா அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். கோலி இல்லாத இந்திய அணி அதே உத்வேகத்துடன் விளையாடி இலங்கையை வீழ்த்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒருநாள் தொடரை இழந்தது இல்லை. தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடரை கைப்பற்றி இருந்தது.

ஜிம்பாப்வே (3-0), நியூசிலாந்து (3-2), இங்கிலாந்து (2-1), வெஸ்ட் இண்டீஸ் (3-1), இலங்கை (5-0), ஆஸ்திரேலியா (4-1), நியூசிலாந்து (2-1) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 அணிகளை மட்டும் அந்நாட்டு மண்ணில் வீழ்த்தி இருந்தது. மீதியுள்ள 4 ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் வென்றது.

இந்திய அணி தற்போது இலங்கையை வீழ்த்தி தொடர்ச்சியாக 8-வது ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.

டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் இருக்கிறது. மேலும் சொந்த மண்ணில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒயிட்வாஷ் (0-5) ஆகி இருந்ததால் அதற்கு பழிதீர்க்கும் ஆர்வத்துடனும் திகழ்கிறது.

ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணியில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. பெரைரா தலைமையில் அந்த அணிக்கு இதனால் பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாளைய ஆட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் போர்ட்ஸ் சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பொதுவாக பகல் – இரவு ஆட்டங்கள் பிற்பகல் 1.30 மணிக்கு தான் தொடங்குகிறது. பனிபொழிவு அதிமாக இருக்கும் என்பதால் 2 மணிநேரம் முன்னதாக போட்டி தொடங்கப்படுகிறது.

இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), தவான், ரகானே, கேதர்ஜாதவ், டோனி, ஷிரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், யசுவேந்திர சகால், பும்ரா, புவனேஷ்வர்குமார், சித்தார்த் கபூல்.

இலங்கை: திசாரா பெரைரா (கேப்டன்), உபுல் தரங்கா, திரிமானே, மேத்யூஸ், லக்மல், சமரவிக்ரமா, குஷால் பெரைரா, தனன் ஜெயா டிசில்வா, அகிலா தனன்ஜெயா, சதுரங்க டிசில்வா, சமீரா, டிக்வெலா, நுவன், பிரதீப், குணரத்தனே, குணதிலகா, பதிரனா.

Comments

தொடர்புடைய செய்திகள்