Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

வாக்காளருக்கு பணம் கொடுக்க மாறுவேடத்தில் செல்லும் அமைச்சர்கள்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

Posted On : December 11, 2017

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் காய்கறி மார்க்கெட் சந்திப்பில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். இந்த மார்க்கெட்டில் உள்ள எந்தக் கடையின் பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி இல்லை. 163 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மோடி கார்ப்ரேட்களுக்கு ஆதரவானவர் என்கின்றனர். அவரது முத்ரா திட்டத்தில், தெருவோர காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் 6 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள் அதிகம் பலனடைந்துள்ளனர். 5 கோடி தாய்மார்களுக்கு இலவச காஸ் வழங்கப்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகரில் சில அமைச்சர்கள், குறிப்பாக செல்லூர் ராஜூ போன்றவர்கள் மாறுவேடத்தில் சைக்கிள், பைக், ஆட்டோவில் சுற்றி வருகின்றனர். வாக்கு சேகரிக்கச் சென்றால் பரவாயில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஏஜென்ட்களை சந்திக்கவும், கண்காணிக்கவும், பணம் அளிக்கவும் செல்கின்றனர். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களை கைது செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்