Home / விளையாட்டு /

வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்டில் டு பிளிசிஸ் விளையாடுவாரா?

Posted On : December 19, 2017

ஜிம்பாப்வேயிற்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் விளையாடுவது சந்தேகம் எனத் தெரியவந்துள்ளது.

ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி பெரும்பாலும் ஐந்து நாட்கள் முழுவதும் நடைபெறுவதில்லை. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் நான்கு அல்லது மூன்றரை நாட்களில் முடிவடைந்து விடுகிறது. இதற்கிடையே,  டெஸ்டில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைக்கலாம் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன.

நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நடத்த தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக ஜிம்பாப்வே அணிக்கெதிராக ‘பாக்கிங் டே’ என அழைக்கப்படும் டிசம்பர் 26-ந்தேதி பகல்-இரவு போட்டியாக நடத்த முடிவு செய்தது.

இதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் வருகிற 26-ந்தேதி நான்கு நாட்கள் கொண்ட பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நடக்க இருக்கிறது. முக்கியமான இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் களம் இறங்குவது கடினம் எனக்கூறப்படுகிறது.

சமீபத்தில் வங்காள தேச அணி தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது டு பிளிசிஸ் முதுகு வழி காரணமாக அவதிப்பட்டார். இதனால் 6 வாரம் காலம் ஓய்வெடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த தோள்பட்டை காயத்திற்காக ஆபரேசன் செய்து கொண்டார். இதனால் ஓய்வில் இருக்கும் டு பிளிசிஸிற்கு மேலும் ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் நான்கு நாட்கள் கொண்ட பகல் – இரவு டெஸ்டில் டு பிளிசிஸ் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிய வந்துள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்