Home / உலகம் /

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியாவிடம் ஆதரவு திரட்டிய அரபு நாடுகள்

Posted On : December 22, 2017

ஐ.நா. பொது சபையில் ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியுள்ள நிலையில், இதற்காக இந்தியாவிடம், அரபு நாடுகள் கடந்த 15 நாட்களாக ஆதரவு திரட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 1948-ல் இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான் சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது. அதன்பிறகு 1967-ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேமை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க தீர்மானத்தை திரும்ப பெறக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அமெரிக்கா தனக்குள்ள வீட்டோ அதிகாரத்தால் அதை தடுத்து நிறுத்தியது.

இதை தொடர்ந்து, ட்ரம்பின் அறிவிப்பை நிராகரித்து, ஜெருசலேம் விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நேற்று (வியாழன்) தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 128 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 9 நாடுகள் தீர்மானத்திற்க எதிராக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்துள்ளது.

இந்நிலையில் ஜெருசலேம் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தியாவிடம்,  அரபு நாடுகள் கடந்த 15 நாட்களாக ஆதரவு திரட்டிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளன.

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா தனது பாரம்பரிய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என, சவுதி அரேபியா மற்றும்  பாலஸ்தீனத்திடம், வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே. அக்பர் சார்பில் உறுதி மொழி அளிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியறவுத்துறை செய்திதொடர்பாளர் ரவிஷ் குமார், சவுதி, பாலஸ்தீன நாடுகள் ஆதரவு கோரி இந்தியாவை அணுகியதாக கூறினார்.

இதனிடையே ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மான் அலி சப்தி, அடுத்தவாரம் இந்தியா வரவுள்ளார். அப்போது ஜெருசலேம் விவகாரம் தொடர்பாகவும் இந்தியாவுடன் அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது. அதேசமயம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஜனவரியில் இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

தொடர்புடைய செய்திகள்