Home / உலகம் / தொழில்நுட்பம் /

மாருதி சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் கார்: இந்திய வெளியீட்டு தகவல்கள்

Posted On : December 23, 2017

இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி விரைவில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்க தயாராகி வருகிறது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின் படி மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரினை 2020-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை வெளியிட இருப்பதாக மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்திய சந்தையில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் மாருதி எலெக்ட்ரிக் வெளியிடுவதற்கான பணிகளை மாருதி சுசுகி துவங்கியுள்ளது.

சுசுகி மற்றும் டொயோட்டா கூட்டணியின் கீழ் மாருதி சுசுகி நிறுவனம் தொழில்நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறது. முதல் எலெக்ட்ரிக் கார் சார்ந்த தகவல்களை கேட்டதற்கு, அதற்கான நேரம் வரும் போது தெரிவிப்பதாக பார்கவா தெரிவித்தார். எனினும் புதிய எலெக்ட்ரிக் கார் கொண்டு அனைவரும் வாங்கக்கூடிய விலையில் வழங்க இருப்பதாக பார்கவா தெரிவித்துள்ளார்.

எலெக்ட்ரிக் கார்களில் இந்தியர்கள் அதிகம் எதிர்பார்ப்பது என்ன என்ற வகையில் மாருதி சுசுகி நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை பிப்ரவரி 2018-இல் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை கொண்டு 2020-ம் ஆண்டில் எவ்வித எலெக்ட்ரிக் காரை வெளியிடுவது என்பதை முடிவு செய்யப்பட இருக்கிறது.

எலெக்ட்ரிக் கார்களை வெளியிடுவதற்கு இணையாக அவற்றுக்கான சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் தனக்கான சார்ஜிங் மையங்களை மாருதி சுசுகி கட்டமைப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறது. மேலும் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க எவ்வித வெளிநாட்டு மற்றும் இதர நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் e2o மற்றும் வெரிட்டோ மாடல்களில் எலெக்ட்ரிக் பதிப்பை வழங்கும் ஒற்றை நிறுவனமாக மஹேந்திரா இருக்கிறது. இத்துடன் 2020-ம் ஆண்டு வாக்கில் புதிய எலெக்ட்ரிக் மாடல்களை மஹேந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிட்டிருந்தாலும், வணிக ரீதியாக இவை விற்பனை செய்யப்படுவதில்லை.

Comments

தொடர்புடைய செய்திகள்