Home / ஆன்மீகம் /

பார்த்தசாரதி கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள்

Posted On : December 27, 2017

பார்த்தசாரதி கோவிலில் நடைபெற உள்ள சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு 1 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கோவில் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

வைணவ திருத்தலங்கள் 108-ல் தொன்மை வாய்ந்த கோவில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாக உதவி ஆணையர் (நகை சரிபார்ப்பு) மு.ஜோதிலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் சிறப்பான முறையில் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 மருத்துவ குழுவினர் மற்றும் ஒரு ஆம்புலன்சுடன் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அதிக அளவில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு என சிறப்பு வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரூ.300 டிக்கெட் வைத்திருப்பவர்களும், பேட்ஜ் அணிந்து இருப்பவர்களும் கோவிலின் மேற்கு கோபுர வாசல் வழியாக அதிகாலை 2.30 மணி முதலே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருவார் கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்