Home / சினிமா / இந்திய சினிமா /

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?: திரையுலக பிரபலங்கள் கருத்து

Posted On : December 27, 2017

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நேற்று ரசிகர்களை சந்தித்து அரசியலில் ஈடுபடுவதா? வேண்டாமா? என்பது குறித்த தனது முடிவை வருகிற 31-ந்தேதி அறிவிக்கப்போவதாக தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன முடிவு எடுப்பார் என்று நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி நடிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:-
“ரஜினிகாந்த் மட்டுமல்ல, 18 வயது பூர்த்தியானவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிக்கு அரசியல் புதிது அல்ல. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் மூன்று முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு முன்பு இந்தியா முழுவதும் 5 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்தார்.
அதுபோன்று சுற்றுப்பயணம் செய்ய ரஜினிகாந்தின் உடல்நிலை இடம் கொடுக்குமா? 35 வயதில் விட்டதை 65-ல் பிடிக்க முடியுமா? என்பது தெரியவில்லை. 96-ல் கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விட்டு விட்டார். எம்.எல்.ஏ ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டால் சரியாக இருக்கும். முதல்-அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படுவது பெரிய விஷயம். கடவுள் அருள் இருந்தால் முடியும். வருகிற 31-ந்தேதி அவர் புத்தாண்டு வாழ்த்து மட்டுமே சொல்வார் என்று நினைக்கிறேன்.”
இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.
நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது:-
“இன்றைய அரசியல் நிலையற்ற தன்மையில் இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு தமிழகத்தையே அதிர்ச்சியடையை வைத்துள்ளது. ரஜினிகாந்துக்கு அரசியல் புதிது அல்ல என்பது உண்மைதான். அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணிக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருக்கிறார். நதிகள் இணைப்புக்காக குரல் கொடுத்து இருக்கிறார். ரஜினி என்ன சொல்லப்போகிறார் என்பதை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்ப்பார்க்கிறார்கள்.”
இவ்வாறு அவர் கூறினார்.
டைரக்டர் மகேந்திரன் கூறியதாவது:-
“ரஜினிகாந்துக்கு பொக்கிஷமாக இருப்பது அவரது நிதானம். அவர் அநீதிக்கு பயந்தவர். அதர்மத்துக்கு பயந்தவர். மனசாட்சிக்கு பயந்தவர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று மறைந்த சோ கூறியிருக்கிறார். நேர்மையான நல்ல தலைவருக்கு உள்ள அத்தனை தகுதிகளும் ரஜினிக்கு இருக்கிறது. அரசியல் முடிவை நிதானமாகத்தான் அவர் எடுப்பார். அதுவரை ரசிகர்கள் பொறுத்து இருக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்