Home / ஆன்மீகம் /

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் நடைபாதை தரிசனம் ரத்து

Posted On : December 27, 2017

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் நடைபாதை தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்களுக்கான தரிசனம், திவ்ய தரிசனம் ஆகியவை 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமயபவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டு பேசினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அதையொட்டி பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். திருமலையில் பல்வேறு இடங்களில் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம், குடிநீர் வழங்கப்படும். நாராயணகிரி பூங்கா, தரிசன வரிசை பகுதியில் நடமாடும் கழிவறை வாகன வசதி செய்து கொடுக்கப்படும். திருமலையில் இரவில் வி‌ஷ உயிரினங்கள் நடமாட்டத்தை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமலையில் பாத கங்கையம்மன் கோவிலில் இருந்து கர்நாடக சத்திரம், அருங்காட்சியகம் வழியாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்குத் தரிசன வரிசை அமைக்கப்பட்டுள்ளது. திருமலையில் ஜி.என்.சி.டோல்கேட்டில் இருந்து மகா துவாரம் வரை தோரணங்கள், அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரம் ஆகியவற்றை செய்ய வேண்டும். கோவிலில் உள்ள தங்கக்கொடி மரம், பலிபீடம் ஆகியவற்றை பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்படும்.

பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க நடமாடும் மருந்தக வசதி செய்து கொடுக்கப்படும். பாதுகாப்பு, பக்தர்களுக்கான சேவை பணியில் ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள், சாரண-சாரணியர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மூலமாகவே பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வைகுண்ட ஏகாதசி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் அரசு பஸ்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இலவச பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும். பக்தர்களுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்ட ஆன்மிக புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் ஒரு வருட கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான தரிசனம், நடைபாதை தரிசனம் ஆகியவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. கோவிந்த மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கும் சிறப்பு தரிசன ஏற்பாடு செய்து கொடுக்கப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்