Home / ஆன்மீகம் /

வைகுண்ட ஏகாதசியும்! வாழ்வியல் தத்துவமும்!

Posted On : December 28, 2017

ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு? என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நாளை (வெள்ளிக் கிழமை) வைகுண்ட ஏகாதசி.

‘மாஸானாம் மார்கசீர்ஷ அஹம்’ (மாதங்களில் நான் மார்கழி) என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொந்தம் கொண்டாடிய மாதம், மார்கழி மாதம்.
சிறந்த வழிகாட்டியாகவும், சிறந்த வழியாகவுமே (மார்க-வழி, சீர்ஷ-தலைமை/ தலையாய) விளங்குகிற மார்கழியின் சிறப்புகளும் ஏராளம். மிருகசீர்ஷ நட்சத்திரம் சந்திரனுடன் சேர்வதால் மார்கசீர்ஷம் என்றும் (மார்கசீர்ஷம் என்பதே மார்கழி என்று சுருங்கிவிட்டது), சூரியன் தனுசு ராசியில் இணைவதால் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிற இம்மாதத்தில்தான் சிவபெருமானுக்கு உரித்தான ஆருத்ரா தரிசனப் பண்டிகையும் (திருவாதிரைத் திருநாள்) திருமாலுக்கு உரித்தான வைகுண்ட ஏகாதசியும் வருகின்றன. தவிரவும், குருஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கீதோபதேசம் செய்தார். ஆகவே, இதே நாள், கீதா ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதத்தை சிலர், ‘பீடை மாசம்’ என்று ஒதுக்குகின்றனர். கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்வுகளை இம்மாதத்தில் நிகழ்த்துவதில்லை என்பதையும் சேர்த்துக்கொண்டு, பீடை மாதம் என்பதற்கு இன்னும் சிலர் ஆதரவு தேடுகின்றனர். பேச்சு வழக்கில், சொற்கள் சில சிதைந்துபோகும். ஐந்து என்று எழுதுவது, பேசும்போது அஞ்சு என்றாகும். அதுபோல், மார்கழி மாதத்தின் சிறப்பு அடையாளத்துக்கான சொல் சிதைந்தது; இதனாலேயே, ‘பீடை மாதம்’ என்னும் தவறான பிரயோகம் வந்துவிட்டது.
இது ‘பீத மாதம்’! ‘பீத’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘மஞ்சள்‘ என்று பொருள். பீதாம்பரம் (பீத+அம்பரம்) என்றும், மஞ்சள் வண்ண ஆடை என்றும் பொருள். மார்கழியில், அதுவரைக்கும் இருந்த இருளும் மழையும் விட்டுப்போய், குளிர் வந்துவிடும். இருந்தாலும், அடுத்து வரவிருக்கிற உத்தராயணத்தின் காரணமாக, செடிகொடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். குறிப்பாக, மஞ்சள் வண்ணப் பூக்களைத் தரும் தாவரங்கள் அதிகமாகப் பூக்கும். இதனால், சுற்றிலும் பார்க்கும்போது, மஞ்சள் வண்ணம் பிரதானமாகக் கண்ணில் படும். இதை வைத்துக் கொண்டு நம்முடைய முன்னோர்கள், இந்த மாதத்தைப் ‘பீத மாதம்’ என்று விவரித்தார்கள். இதுவே காலப்போக்கில் மருவி, ‘பீடை மாதம்’ என்றாகிவிட்டது.
அது சரி, அப்படியென்றால், கல்யாணம் போன்றவை மார்கழி மாதத்தில் வேண்டாமென்று ஏன் சொன்னார்கள்? அதற்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன. மழை, இருள் போன்றவை அகன்று, அடுத்து வரவிருக்கும் தை மாதத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கவேண்டும். எந்தப் பணியாக இருந்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன்னர் கடவுளை வணங்குவது நம்முடைய மரபு. அதுவும் வயிற்றுக்குச் சோறிடும் அறுவடைப் பணிகளுக்கு முன்னதாக தெய்வத்தைத் தொழாதிருக்கலாமா? அது மட்டுமில்லை, அறுவடை முடிந்தால்தான் கையில் பணம் கிடைக்கும். அப்போதுதான் திருமணம், கிரகப்பிரவேசம் போன்றவற்றை நடத்த முடியும்.
இன்னொரு காரணமும் உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை. ஒரு வீட்டில் கல்யாணம் என்றால், மொத்த கிராமமும் அதில் பங்கெடுக்கும். கிராமம் முழுக்கத் திருமண வீட்டில் குவிந்துவிட்டால், ஊர்ப் பொதுவையும் கோவில் வேலைகளையும் யார் கவனிப்பார்கள்? இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டனர் நம்முடைய பெரியவர்கள். சூழல், வருமானம், கோவில் காரியம் என்று எல்லாவற்றுக்கும் வசதியாக மார்கழி மாதத்தைக் கடவுள் வழிபாட்டு மாதமாக மாற்றிவிட்டனர்.
இந்தக் காத்யாயனி நோன்பை மார்கழியில்தான் நோற்றார்களாம். பழந்தமிழ் நூலான பரிபாடல், மார்கழி மாதத்தில் கன்னியர்கள், அம்பா ஆடல் ஆடினர் என்கிறது. காத்யாயனி நோன்பையும் அம்பா ஆடலையும் அடிப்படையாகக் கொண்ட ஆண்டாள் நாச்சியாரும் மாணிக்கவாசகப் பெருமானும், திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிக் கொடுத்தனர்.
மார்கழி மாதப் பண்டிகைகளில் வெகு சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு மோஷதா (மோட்சம் தருவது) ஏகாதசி, முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், திருமால் திருக்கோவில்களில், வைகுண்ட வாசல் திறப்பு வெகுகோலாகலமாக நடைபெறும்.
திருமால் ஆலயங்களில், உள் பிரகாரத்தில் இருந்து வெளிப்பிராகாரத்துக்கு திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருப்பார்கள். பக்தர்களில் சிலர், பெருமாள் எழுந்தருளும்போது, தாங்களும் கூடவே இந்த வாசல் வழியாக வருவார்கள். இன்னும் சிலர், நாள் முழுவதும் வைகுண்ட வாசல் வழியாக வந்து, ஏற்கனவே இவ்வாசல் வழியாக எழுந்தருளி, மண்டபத்திலோ, அலங்கார மேடையிலோ கொலுவிருக்கும் பெருமாளை சேவிப்பார்கள்.
ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு? ஒருமுறை, பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவை தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார். அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர். அவரின் கர்வமும் அடங்கியது. நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர்.
இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள். தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோவில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று வேண்டினர்.
இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபதமான வைகுண்ட பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன.

Comments

தொடர்புடைய செய்திகள்