Home / ஆன்மீகம் /

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Posted On : December 28, 2017

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 18-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. மறுநாள் பகல் பத்து உற்சவம் ஆரம்பமானது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்காக அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். பரமபதவாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் காலை 5.15 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசிக்கிறார். காலை 6.30 மணிக்கு சாதரா மரியாதை செய்யப்படுகிறது. காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 12 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 30-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.
முன்னதாக பகல் பத்து உற்சவத்தின் ஒன்பதாவது நாளான இன்று (வியாழக்கிழமை) நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். இன்று நடைபெற உள்ள மோகினி அலங்காரம் மற்றும் நாளை நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள் சில இடங்களில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறி செல்ல இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருப்பது போல் ஸ்ரீரங்கம் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு அன்று சாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் கோவில் வளாகத்திற்குள் ஆரியபடாள் வாசல் அருகில் இரும்பினால் ஆன சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சிறப்பு வசதி இப்போது தான் முதல் முறையாக அமல்படுத்தப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்