Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

அமெரிக்காவில் கொட்டும் பனி மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted On : December 29, 2017

அமெரிக்கா மற்றும் கனடாவில் சாலைகளை மூடும் அளவுக்கு கொட்டும் பனிமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நியூயார்க்:

குளிர் காலத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவில் பனி மழை கொட்டுகிறது. இதனால் கடுமையான குளிர்காற்று வீசுகிறது.

பென்சில்வேனியாவின் எரீ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி மழை பெய்கிறது. அங்கு ரோடுகளில் 5 அடி உயரம் வரை பனி கொட்டிக் கிடக்கிறது. வீட்டின் முன்பும், அங்கு நிறுத்தி வைத்திருக்கும் கார்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களிலும் பனி படர்ந்து கிடக்கிறது.

இதனால் வீடுகளின் கதவுகளை திறந்து மக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றுவதில் தேசிய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ‘கிரேட் லேக்ஸ்’ பகுதியில் கடும் பனி கொட்டுகிறது.

மின்ன கோட்டா மற்றும் நியூ ஹாம்ப்ஷிர்ஸ் மாகாணத்தில் மவுண்ட் வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இங்கு மைனஸ் 38.3 டிகிரி மற்றும் மைனஸ் 36.3 டிகிரி அளவில் தட்ப வெப்ப நிலை உள்ளது.

நியூயார்க் நகரில் 5 அடி உயரத்துக்கு பனி கொட்டி கிடக்கிறது. அங்கு தீயணைப்பு படையினர் பனிக்கட்டிகளை வெட்டி சாலையில் வழி ஏற்படுத்தி தருகின்றனர். அதன் மூலம் அங்கு போக்குவரத்து நடைபெறுகிறது.

அமெரிக்காவில் நியூயார்க் டைம் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.

ஆனால் இந்த ஆண்டு கொட்டும் பனியில் புத்தாண்டு கொண்டாட வேண்டிய நிலை உள்ளது. நியூஜெர்சியிலும் பனி கொட்டுகிறது. எனவே அங்குள்ள நகர மக்கள் புத்தாண்டு கொண்டாட அட்லாண்டிக் கடல் பகுதிக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.

நியூயார்க், பிலடெல்பியா, நியூ இங்கிலாண்டு பகுதியிலும் மைனஸ் 17 டிகிரிக்கு தட்ப வெப்ப நிலை சென்று விட்டது. எனவே அங்கு கடுமையான குளிர்காற்று வீசுகிறது.

கடும் குளிருக்கு சிகாகோவில் 62 வயது முதியவரும், கன்சாசில் 4 பேரும் பலியாகி உள்ளனர். அண்டார்டிக்கில் இருந்து அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி கடும் குளிர் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

தொடர்புடைய செய்திகள்