Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

அ.தி.மு.க – பா.ஜனதா உறவு: அமைச்சர்கள் கருத்து வேறுபாடு

Posted On : December 29, 2017

பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கட்சி கூட்டணி அமைப்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி கூறிய மாறுபட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

பா.ஜனதா கட்சியுடன் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 1998-ம் ஆண்டு கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது.
ஆனால் சில மாதங்களுக்குள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலகினார். அதன் பிறகு பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி ஏற்படவில்லை.
ஜெயலலிதா 2001, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் சுமூகமான உறவை மட்டுமே கடைபிடித்து வந்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளாக அவர் தலைமையிலான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி எதையும் வைத்துக் கொள்ளவில்லை.
2014-ம் ஆண்டு மத்தியில் வெற்றி பெற்று பிரதமரான நரேந்திரமோடி, மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க.வுக்கு முக்கிய இடம் கொடுப்பதாக கூறிய போது கூட அதை ஏற்க ஜெயலலிதா மறுத்து விட்டார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனான அ.தி.மு.க.வின் நெருக்கம் அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க.வில் பிளவு மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் ஆதரவு காரணமாக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இடையூறு இல்லாமல் ஆட்சியை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடியுடன் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நல்ல நெருக்கமான நட்பில் இருப்பதால் பா.ஜ.க. – அ.தி. மு.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று தகவல்கள் வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டாலும், 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டால் ஓரிரு இடங்களை பெற முடியும் என்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீர்மானமாக உள்ளனர். அதை கருத்தில் கொண்டுதான் அ.தி.மு.க. தலைவர்களையும் ஆட்சியையும் பா.ஜ.க. அரசு மறைமுகமாக தங்கள் கட்டுப்பாட்டுகள் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடையே இப்போதே கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. அ.தி.மு.க.வில் ஒரு சாரார், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் மற்றொருசாரார், பா.ஜ.க.வுடனான உறவு வி‌ஷயத்தில், ஜெயலலிதா எத்தகைய நிலைப்பாட்டை கடைபிடித்தாரோ, அதே நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
தற்போது இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ராஜேந்திர பாலாஜியும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-
பா.ஜனதா கட்சியுடன் இனி ஒட்டோ, உறவோ இல்லை என்று ஜெயலலிதா முன்பே திட்டவட்ட முடிவை எடுத்தார். பா.ஜனதா கட்சி மதவாத கட்சி என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். ஜெயலலிதாவின் அந்த நிலைப்பாட்டைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மத்திய அரசு மீது நாடு முழுவதும் மக்களிடம் எதிர்ப்பும் அதிருப்தியும் உள்ளது. பா.ஜ.க.வுடன் தற்போது அ.தி.மு.க. இணக்கமாக இருப்பதால் தமிழக மக்கள் மனதில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க. மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 30 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைக்கமாக இருந்ததால்தான் அந்த வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை.
அதனால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியைத் தழுவ நேரிட் டது. அந்த 30 சதவீத வாக்குகளும் மத்திய அரசை எதிர்த்த டி.டி.வி.தினகரனுக்கு கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றார்.
மத்திய ஆளும் பா.ஜனதா கட்சி மதவாத கட்சி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. நிச்சயம் கூட்டணி வைக்கக்கூடாது.
அத்தகைய கூட்டணி சூழ்நிலை வராது என்றே நினைக்கிறேன். அப்படி வந்தால் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி ஏற்படவிடாமல் இந்த செல்லூர் ராஜு தடுத்து நிறுத்துவான். அந்த கூட்டணியை நான் வர விடமாட்டேன்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதால் அந்த கட்சியுடன் இணைக்கமாக இருக்கலாம். தமிழ்நாட்டுக்கு தேவையானதை கேட்டுப் பெற வேண்டும் என்பதால் இணக்கமாக இருக்கலாம். ஆனால் கூட்டணி கூடாது. கூட்டணி வேறு, இணக்கும் வேறு.
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் தவறை மீண்டும் செய்யக்கூடாது. அதில் தெளிவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
அவரது இந்த கருத்துக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணக்கமாக இருந்ததே காரணம் என்று செல்லூர் ராஜு கூறி இருப்பதை ஏற்க இயலாது. அது அவரது தனிப்பட்ட கருத்து.
தோல்வி என்பது விபத்து போன்றது. அது வெற்றி படிக்கட்டாகவும் மாறும்.
அரசியலை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே ஒரு தடவை பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.க.வுடன் மற்ற கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளன. எனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதில் தவறு இல்லை.
அரசியலில் வெற்றி பெற பல சித்து விளையாட்டுகள் தெரிந்து இருக்க வேண்டும். ரஜினி வெகுளி. அவர் அரசியலுக்கு சரிபட்டு வர மாட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் அவர் ஜெயித்திருக்கலாம். அவரது வயது, குணத்துக்கு இப்போதுள்ள அரசியல் சரிபட்டு வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகள் வெளியிட்டது. அ.தி.மு.க. வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்