Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

சிவகாசியில் 4-வது நாளாக பட்டாசு ஆலைகள் மூடல்: ரூ.15 கோடி வர்த்தகம் பாதிப்பு

Posted On : December 29, 2017

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தம் இன்று 4-வது நாளாக தொடருகிறது. தொடர் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி:

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் பட்டாசு உற்பத்தி குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைந்து முடிக்கக் கோரியும் மத்திய அரசு சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவரக் கோரியும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 26-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக 860-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 3 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் தொடருகிறது.

இந்த நிலையில் அகில இந்திய பட்டாசு சங்க கூட்டமைப்பின் மாநாடு சிவகாசியில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பட்டாசு விற்பனைக்கு தடை வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு பிரதிவாதியாக நினைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேலை நிறுத்தம் குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மாரியப்பன் கூறுகையில், பட்டாசு மற்றும் அதனைச் சார்ந்த உப தொழில் கூட்டமைப்பு சங்கத்தினர் பட்டாசு தடை வழக்கில் தங்களையும் பிரதிவாதிகளாக சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடி, மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் ஆகியோருடன் முறையிட உள்ளோம். தமிழக முதல்வரையும் இது தொடர்பாக சந்திக்க உள்ளோம் என்றார்.

பட்டாசு உற்பத்தியாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பட்டாசு தொழிலாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பின் பட்டாசு ஆர்டர்கள் அதிகளவில் வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் திடீரென்று பட்டாசு உற்பத்திக்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆர்டர்கள் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். வேலை நிறுத்தத்தால் வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது என்றனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்