Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

டெல்லியில் காற்று மாசு: பாராளுமன்ற கூட்டத்தை தென்இந்தியாவில் நடத்த அ.தி.மு.க. எம்.பி. கோரிக்கை

Posted On : December 29, 2017

தலைநகர் டெல்லியில் காற்று மாசு இருப்பதால் பாராளுமன்ற கூட்டத் தொடரை தென்இந்தியாவில் நடத்தலாம் என்று அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

டெல்லியில் ஏற்படும் காற்று மாசு தொடர்பாக டெல்லி மேல்-சபையில் நேற்று குறுகிய நேர விவாதம் நடந்தது. இதில் கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஏ.நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

நவநீதகிருஷ்ணன் எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

டெல்லியில் ஒவ்வொரு வரும் வசிப்பதற்கு அச்சப்படுகிறார்கள். மனிதர்கள் நீண்ட காலம் உடல் தகுதியுடன் வசிக்க முடியாத அளவுக்கு காற்றுமாசு உருவாகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றன. அனைவரும் தரமான காற்றை சுவாசித்து உயிர்வாழும் உரிமை குறித்து அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

காற்று மாசுவை கட்டுப்படுத்த அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்க வேண்டும்.

பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பாராளுமன்ற கூட்டத்தை தென்இந்தியாவுக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன். இதனால் நமது வட இந்திய நண்பர்கள் காற்று மாசு இல்லாமல் நல்ல தட்ப வெப்ப நிலையை சந்தோ‌ஷமாக பெற இயலும்.

பாராளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடரை நாக்பூர், பெங்களூர் அல்லது சென்னையில் நடத்தலாம். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Comments

தொடர்புடைய செய்திகள்