Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

நமோ செயலியை பயன்படுத்தி எனது தகவல்களை பா.ஜ.க. எம்.பி.க்கள் பார்ப்பதில்லை: பிரதமர் மோடி வருத்தம்

Posted On : December 29, 2017

நமோ செயலியை பா.ஜ.க. எம்.பி.க் கள் சரிவர பயன்படுத்துவது இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் பா.ஜனதா கட்சிக்கு மொத்தம் 333 எம்.பி.க்கள் உள்ளனர்.

பாராளுமன்ற மக்களவையில் 276 பேரும் மாநிலங்களவையில் 57 பேரும் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி பா.ஜ.க. எம்.பி.க்களுடன் நேரிடையாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக நமோ செயலி எனும் புதிய ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் அதில் பிரதமர் மோடி தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

எம்.பி.க்களுடன் மட்டுமின்றி மாநில எம்.எல். ஏ.க்களுடனும் பிரதமர் மோடி இந்த நவீன வசதியை பயன்படுத்தி தொடர்பு கொள்வது உண்டு. சமீபத்தில் குஜராத் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்தபோது அம்மாநில நிர்வாகிகளுடன் மோடி இந்த செயலி மூலம்தான் தொடர்பு கொண்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்.

இந்த நிலையில் நமோ செயலியை பா.ஜ.க. எம்.பி.க்கள் சரிவர பயன்படுத்துவது இல்லை என்று மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாம் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்குதான் நமோ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் யாருமே அதை கண்டு கொள்ளவில்லை.

குறைந்தபட்சம் தினமும் காலை எனக்கு அதில் நீங்கள் குட்மானிங் கூட சொல்வதில்லை. உங்கள் தொகுதி பிரச்சினைகளை நீங்கள் இந்த செயலி மூலம் என் கவனத்துக்கு கொண்டு வரலாம்.

இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் முக்கிய தகவல்களை நீங்கள் எனக்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

 

Comments

தொடர்புடைய செய்திகள்