Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

கனகன் ஏரியில் பிப்ரவரியில் படகு சவாரி: கவர்னர் கிரண்பேடி உத்தரவு

Posted On : December 30, 2017

கனகன் ஏரியை சுற்றி நடைபாதை, சிறுவர் பூங்கா அமைத்து வருகிற பிப்ரவரிக்குள் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

இன்று கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் மாணவர்கள், அதிகாரிகளோடு கவர்னர் கிரண்பேடி புறப்பட்டார். வழுதாவூர் சாலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள கனகன் ஏரிக்கு அவர் சென்றார்.

அங்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஏரியிலிருந்த ஆகாய தாமரையை அகற்றிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த கவர்னர் ஏன் அதிகாரிகள் யாரும் வரவில்லையா? என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் செய்யும் பணியை பாராட்டினாலும், பாதுகாப்பின்றி பணிகளை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.

பின்னர் கனகன் ஏரியை கவர்னர் முழுமையாக சுற்றிப்பார்த்தார். பின்னர் அதிகாரிகளிடம், அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் ஏரியில் கலக்கக்கூடாது. தற்போது ஏரியில் கழிவுநீராக இருப்பதால் அதை அகற்றிவிட்டு, புதிதாக நீரை தேக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஏரியை சுற்றி நடைபாதை, சிறுவர் பூங்கா அமைத்து வருகிற பிப்ரவரிக்குள் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதுவரை ஒவ்வொரு வாரமும் இங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட நேரில் வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே கனகன் ஏரியை மீட்போம் என்ற அமைப்பின் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு தொண்டு நிறுவனத்தை இணைத்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரே நேரத்தில் கனகன் ஏரியை சுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

 

Comments

தொடர்புடைய செய்திகள்