Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

திண்டுக்கல் அருகே கந்து வட்டி கொடுமையால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த பெண்

Posted On : December 30, 2017

திண்டுக்கல் அருகே கந்து வட்டி கொடுமையால் வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இவரது கணவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடைரோடு:

மதுரை காமராஜர்புரம் இந்திரா நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 60). ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி காயத்திரி (55). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கேசவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே குடும்பத்தை சமாளிக்க கந்து வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் கேசவனை நெருக்கினர். எனவே அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்த விபரத்தை தனது மனைவி காயத்திரியிடம் தெரிவித்தார். மனதை கல்லாக்கிக் கொண்ட காயத்திரி நானும் உங்களுடன் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

அதன்படி கணவன்- மனைவி 2 பேரும் மதுரையில் இருந்து ரெயில் மூலம் திண்டுக்கல் அருகே உள்ள கொடை ரோடு வந்து இறங்கினர். சுதந்திராபுரம் என்ற பகுதியில் ஒரு கடை முன்பு நின்றனர். அப்போது காயத்திரி ஏற்கனவே வாங்கி வந்திருந்த வி‌ஷத்தை குடித்தார். கேசவன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது காயத்திரியை மீட்டபோது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. கேசவன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அவரை உடனடியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேசவன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எங்களது சாவுக்கு கோபி, இளங்கோவன் ஆகியோர்தான் காரணம். இவர்களிடம் கடன் வாங்கி இருந்தேன். நான் வட்டி கட்டியே ஓய்ந்து விட்டேன். எனவே மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்