Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

நாகர்கோவில் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை

Posted On : December 30, 2017

நாகர்கோவில் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி நிகிதா, திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்.ஜி.ஒ.காலனி:

நாகர்கோவிலை அடுத்த பறக்கை மேல ரதவீதியை சேர்ந்தவர் முருகன். முன்னாள் ராணுவ வீரர். தற்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

முருகனுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகள் நிகிதா (வயது 20). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ,2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நிகிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். கல்லூரிக்கு செல்லும் வழியிலும் சந்தித்து பேசிக்கொள்வார்கள்.

நிகிதாவின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.மாறாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

நிகிதாவின் மூத்த சகோதரி ஒருவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் அவர்கள் நிகிதாவுக்கு அவரது காதலன் வீட்டாருடன் திருமணம் பேசி முடிவு செய்தனர். அதன்படி வருகிற 19-ந் தேதி நிகிதாவுக்கும், அவரது காதலனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இத்தகவல் நிகிதாவின் காதலன் வீட்டாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ஏப்ரல் மாதம் 27-ந் தேதி திருமண விழாவை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக நிகிதாவின் பெற்றோர், அவருக்கான நிச்சயதார்த்த உடைகள் வாங்கினர். நேற்று பட்டுப்புடவையும் வாங்கி வரப்பட்டது. இந்த பொருட்கள் அனைத்தும் நிகிதாவின் அறையில் வைக்கப்பட்டது.

இன்று காலை நிகிதாவின் தந்தை வேலைக்கு சென்று விட்டார். அவரது தாயார் பகவதி அம்மாள், அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார். வீட்டில் நிகிதா மட்டும் தனியாக இருந்தார்.

கோவிலுக்கு சென்ற பகவதி அம்மாள் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கீழ் அறையில் நிகிதாவை காணவில்லை. எனவே அவர் நிகிதாவை தேடி வீட்டின் மேல் மாடிக்கு சென்றார்.

அங்கு திறந்து கிடந்த அறையில் நிகிதா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த பகவதி அம்மாள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் தூக்கில் தொங்கிய நிகிதாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நிகிதா , ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது பற்றி பகவதி அம்மாள் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் விரைந்து சென்றனர்.அவர்கள் நிகிதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் நிகிதா தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். இதில் நிகிதா, கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அதற்கான காரணத்தை அவர் பெற்றோரிடம் கூறவில்லை என்றும் தெரியவந்தது.

நிகிதாவுக்கு சோகத்தை ஏற்படுத்தியது யார்? ஏன் மனம் உடைந்து காணப்பட்டார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி நிகிதா, திடீரென தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments

தொடர்புடைய செய்திகள்