Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

மதுரையில் வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்ட 7 பேர் கைது

Posted On : December 30, 2017

மதுரையில் வெடிகுண்டு வழக்கில் தேடபட்ட 7 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை:

மதுரையில் வெடிகுண்டு வழக்கில் தேடபட்ட 7 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு மதுரை கீழமாரட் வீதி வெங்காயமண்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. மேலும் 2 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த குண்டு வெடிப்பு மற்றும் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் விளக்குத்தூண் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களின் புகைப்படங்களை அனுப்பியும் விசாரணை நடத்தினர்.

வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருப்பதாக மதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

சம்பந்தப்பட்ட லாட்ஜை கடந்த 2 நாட்களாக தீவிரமாக கண்காணித்தனர். இந்த நிலையில் இன்று காலை லாட்ஜில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்த 7 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் 7 பேரும் மதுரையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 7 பேரின் பெயர் விவரம் வருமாறு:-

1. முகமது ஆரூன் (வயது27).

2. சவுபிக் அலி (24)

3. ஜியாவுதீன் (25)

4. சீனி அல்லாபிச்சை (30)

5. பரூக் அப்துல்லா (27)

6. முகமது அலி (27)

7. அபுபக்கர் சித்திக் (24)

இவர்கள் 7 பேரும் மதுரையை சேர்ந்தவர்கள். கைதான 7 பேரையும் மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தனிப் படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். பல மாதங்களாக தேடப்பட்ட குற்றவாளிகள் போலீசில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments

தொடர்புடைய செய்திகள்