Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted On : December 30, 2017

தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மதுரை:

மதுரையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் ரூ.1660-ம், புது ரகத்துக்கு ரூ.1600-ம் ஆதார விலையாக நிர்ணயித்துள்ளது. இந்த தொகை உற்பத்தி செலவை விட குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லை. 13½ லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் அல்லது கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒக்கி புயலில் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 600 மீனவர்கள் இறந்துள்ளனர். இதில் தமிழகத்தில் 257 மீனவர்கள் இறந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு 12 பேர்தான் இறந்ததாக கூறுகிறது. 257 மீனவர்களின் குடும்பங்களுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மீனவர்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். பிரதமர் மோடி, மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் ஆகியோர் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழகத்தில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும். தற்போது தமிழகம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே நிறைய பேர் தேவைப்படுகிறார்கள்.

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மாநிலத்தை மோசமாக்கி விட்டார்கள். இதற்கு மக்களும், இளைஞர்களும் ஒரு முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இருக்கக்கூடாது. வருங்காலத்தில் பா.ம.க.தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments

தொடர்புடைய செய்திகள்