Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

வண்டலூர் பூங்காவை பார்வையிட ஆன்-லைன் மூலம் டிக்கெட் பதிவு

Posted On : December 30, 2017

வண்டலூர் பூங்காவை பார்வையிட ஆன்-லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று பூங்கா துணை இயக்குனர் சுதா தெரிவித்துள்ளார்.

வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குனர் சுதா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல் முறையாக ஆன்-லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
தற்போது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக வருகிற 14, 15, 16 தேதிகளில் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5½ மணி வரை நுழைவுசீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெருக்கடியின்றி நுழைவுச்சீட்டு பெறுவதற்காக 30 நுழைவுச்சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் மற்றும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க பார்வையாளர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக தற்பொழுது உள்ள வசதிகளுடன் மேலும் சுமார் 1,500 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு கூடுதலாக வாகனம் நிறுத்தும் இடம் ஒன்று வனத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு எதிர்பாராத வகையில் ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றவற்றை எதிர்கொள்வதற்காக மருத்துவ குழு ஒன்று காணும் பொங்கல் அன்று ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகளை செய்யும் பொருட்டு மாநகர போக்குவரத்து மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 150-க்்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு மற்றும் பாலித்தீன் பைகளை பூங்காவினுள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. மேற்படி பொருட்களை கொண்டுவரும் பார்வையாளர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி இயக்குனர் எம்.சண்முகம் உடன் இருந்தார்.

Comments

தொடர்புடைய செய்திகள்