Home / செய்திகள் / இந்தியச் செய்திகள் /

55 பள்ளிகளில் விரைவில் திறனாய்வு மையங்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்

Posted On : December 30, 2017

தட்சிணகன்னடா, உடுப்பி, கார்வார் மாவட்டங்களில் 55 பள்ளிகளில் விரைவில் திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மங்களூரு :

தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் மல்லிகட்டே பகுதியில் எம்.பி. நிதியில் தொழில் வேலை வாய்ப்புகள் மற்றும் கற்பித்தல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.
இதில் மத்திய ராணுவத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதிய மையத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மங்களூருவில் உள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி.டி.இ. நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் கார்வார், உடுப்பி, தட்சிணகன்னடா ஆகிய 3 மாவட்டங்களில் 55 பள்ளிகளில் திறனாய்வு மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும். இவை நிதி ஆயோக்கின் புதுமை மிஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது. மேலும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 2 கல்லூரிகளில் இந்த திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும். மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில் வேலைவாய்ப்புகள் மற்றும் கற்பித்தல் மையம் தொடங்கப்பட்டு உள்ளது வரலாற்று சிறப்புமிக்கது. இது புதிய இந்தியா திட்டத்தின் சின்னமாக விளங்கும். முதல் முறையாக இந்த மையம் மங்களூரு நகரில் எம்.பி. உள்ளூர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ளது. பொதுவாக எம்.பி. நிதியின் கீழ் சாலை வசதி, நூலகங்கள், பூங்காக்கள், சாக்கடை கால்வாய் வசதி ஆகியவை அமைக்கப்படுவது தான் வழக்கம்.
ஆனால் நான் புதுமையாக எம்.பி. நிதியை பயன்படுத்த விரும்பினேன். அந்த நிதியில் புதிய இந்தியா உருவாக ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். அதன்படி தான் இந்த மையங்கள் அமைக்க முடிவு செய்தேன். அந்த மையங்களை கடலோர மாவட்டமான தட்சிணகன்னடாவில் அமைக்க வேண்டும் என்பதே எனது முதல் தேர்வாக இருந்தது. அதன்படி இங்கே அமைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய மையங்களை அனைத்து தொகுதிகளிலும் அமைக்க வேண்டும் என்று நான் கர்நாடக முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதினேன். நாம் அனைவரும் இளைஞர்கள் பயன்படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் சசிகாந்த் செந்தில், நளின்குமார் கட்டீல் எம்.பி., ஜே.ஆர்.லோபோ எம்.எல்.ஏ., மேல்-சபை உறுப்பினர் கணேஷ் கார்னிக், மாநகராட்சி கமிஷனர் முகமது நசீர், மாவட்ட பஞ்சாயத்து தலைவி மீனாட்சி சாந்திகோடு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments

தொடர்புடைய செய்திகள்